லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அங்கு தேர்தல் அரசியல் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அங்கு இப்போது ஓபிசி வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலங்களில் பாஜக பக்கம் சென்ற ஓபிசி வாக்குகள், இந்த முறை மாறியுள்ளது. இதற்கான காரணத்தையும் பின்னணியையும் நாம் பார்க்கலாம்!
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முக்கியமான அரசியல் சோதனையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் எந்த கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஓபிசி அரசியல், சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு ஆகியவற்றை தனது பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக முன்னிறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் தற்போதைய முக்கிய குற்றச்சாட்டு, நடைபெற்று வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சமூகத்தினருக்கென தனி பிரிவு இடம்பெறவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டு. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், அதில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து காங்கிரஸ் தற்போது கேள்வி எழுப்புகிறது. ஓபிசி மக்கள்தொகை முறையாக கணக்கிடப்படாமல் போனால், ஓபிசி பிரிவினருக்கான கொள்கைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை துல்லியமாகத் திட்டமிட முடியாது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை "இந்தியாவின் எக்ஸ்ரே" என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்றும் உண்மையான சாதி எண்ணிக்கை தெரியவந்த பிறகு இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் "ஓபிசி மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி" என்று பாஜக விமர்சிக்கிறது. ஓபிசி சமூகத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பதையும், மாநில மற்றும் தேசிய அளவில் பல ஓபிசி தலைவர்களுக்கு பாஜக வழங்கிய முக்கியத்துவத்தையும் அக்கட்சி சுட்டிக்காட்டுகிறது. மேலும் 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் ஓபிசி இட ஒதுக்கீட்டை ராஜீவ் காந்தி எதிர்த்ததாகவும் பாஜக கூறுகிறது. உத்தர பிரதேசத்தில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், மாநில மக்கள் தொகையில் ஓபிசி சமூகத்தினர் சுமார் 40 சதவீதம் இருக்கிறார்கள்.. இதில் யாதவர்கள் சுமார் 11 சதவீதம், குர்மிகள் 5 சதவீதம், கோரி/குஷ்வாஹா சமூகத்தினர் சுமார் 4 சதவீதம் எனவும், மீதமுள்ளவர்கள் பல்வேறு ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அதில் முக்கிய வியூகமே யாதவர் அல்லாத ஓபிசி சமூகங்களின் வாக்கு வங்கியாகும். 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் இந்த கூட்டணி பாஜகவுக்கு மிக பெரிய வெற்றிகளைத் தேடித் தந்தது. ஆனால் 2024 தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. குர்மி, கோரி மற்றும் பிற ஓபிசி பிரிவுகளில் பாஜகவுக்கான ஆதரவு குறைந்ததாகவும், இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி PDA எனப்படும் பிச்சடா, தலித், சிறுபான்மை கூட்டணியை முன்னிறுத்தியது. இதற்காகவே 2024 தேர்தலில் யாதவர்களுக்கு 5 இடங்களும், முஸ்லிம்களுக்கு 4 இடங்களும் மட்டுமே வழங்கிவிட்டு, யாதவர் அல்லாத ஓபிசிகளுக்கு 27 இடங்கள், பட்டியலினத்தவர்களுக்கு 15 இடங்கள் வழங்கியது. இதன் மூலம் "யாதவர்-முஸ்லிம் கட்சி" என்ற பாஜகவின் விமர்சனத்தை சமாஜ்வாதி கட்சி காலி செய்தது. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. 2024 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் வென்றது. யாதவர்கள் ஆதிக்கம் கொண்ட 68 சட்டசபை தொகுதிகளில் இந்தியா கூட்டணி 44ல் முன்னிலை பெற்றது. குர்மி ஆதிக்கம் கொண்ட தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. குர்மி-கோரி-குஷ்வாஹா செல்வாக்கு கொண்ட 60 தொகுதிகளில் 41ல் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றது. ஏற்கனவே பாஜக ஆதரவு குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதற்கிடையே வேலையின்மை, நீட் லீக் போன்ற பிரச்சினைகளால் இளைஞர்களிடம் உருவாகியுள்ள அதிருப்தி மற்றும் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி பாஜகவுக்கு சவாலாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக யாதவர் அல்லாத ஓபிசி இளைஞர்களின் அதிருப்தியை இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மாற்ற ராகுல் காந்தி முயல்கிறார். இது பாஜகவுக்கு சவாலாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளவே குர்மி சமூகத்தை சேர்ந்த பங்கஜ் சவுத்ரியை மாநில பாஜக தலைவராக நியமித்துள்ளது. சட்டசபை தேர்தலில் குர்மி மற்றும் பிற யாதவர் அல்லாத ஓபிசி சமூகங்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த முறை உத்தர பிரதேசத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதை ஓபிசி வாக்குகளே தீர்மானிக்க போகிறது.ஓபிசி
காங்கிரஸ்- பாஜக
ஓபிசி மக்கள் தொகை
அகிலேஷ் போட்ட கணக்கு
ஓபிசி வாக்குகளே தீர்மானிக்கும்