தீபாவளிக்கு இனிப்பு கடைக்கு சென்ற ராகுல் காந்தி! தந்தை ராஜீவுக்கு பிடித்த ஸ்வீட் செய்து அசத்தல்
டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் ஒரு இனிப்புக் கடைக்குள் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனிப்பு பலகாரங்களை செய்து அசத்தினார். கடந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளுக்கு சென்று இனிப்பு செய்து அசத்தினார்.
டெல்லியில் உள்ள கான்டேவாலா எனும் இனிப்பு கடையில் இமராதி (ஜிலேபி போல் இருக்கும் இனிப்பு), லட்டு உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ராகுல் காந்தி சென்றிருந்தார்.

உடனே ராகுலும் ஏப்ரானை (ஆடை அழுகாகக் கூடாது என்பதற்காக சமையல் கலைஞர்கள் அணியும் ஒரு விதமான ஆடை) அணிந்து கொண்டு இனிப்பு செய்யும் வேலைகளில் இறங்கினார். தலையில் தொப்பி, கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு அவர் பூந்தியை வைத்து லட்டு பிடித்தார்.
அதன் பிறகு, ஜிலேபி போல் இருக்கும் இமராதி எனும் இனிப்பையும் ராகுல் பிழிந்தார். அங்கிருந்த சமையல் கலைஞர்களுடன் உரையாடினார். பிறகு அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
கடந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 200 ஆண்டுகள் பழமையான இனிப்பு கடைக்குச் சென்றார். அப்போது அங்கு இனிப்புகளை வாங்கினார். இதையடுத்து அங்கிருந்த செஃப்களுசன் இமராதி மற்றும் பேரீச்சம்பழம் லட்டுகளைத் தயாரித்தார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், "இந்தக் கடையின் இனிமை இன்றும் தூய்மையாகவும், பாரம்பரியமாகவும், மனதைத் தொடுவதாகவும் இருக்கிறது. தீபாவளியின் இனிப்பு, தட்டுகளில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் தான் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை குறித்து அந்த கடையின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், "ராகுல் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வாங்க வந்திருந்தார். அப்போது அவரிடம், "சார் இது உங்கள் சொந்தக் கடை, உங்கள் தந்தை ராஜீவ் காந்திக்கு இமராதி இனிப்புகள் மிகவும் பிடிக்கும் அதை செய்து பாருங்கள்" என்றேன். அவர் செய்து பார்த்தார், இதையடுத்து அவருக்கு பேரீச்சம் பழம் லட்டு பிடிக்கும் என்பதால் அதையும் செய்து பார்த்தார்.
"ராகுல்ஜி சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமணத்திற்கான இனிப்பு ஆர்டரை பெற நாங்கள் ஆவலுசன் இருக்கிறோம்" என கூறினேன், அவர் சிரித்தார். இவ்வாறு அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினரை சந்தித்து, அவர்களுடன் மஷ்ரூம் பிரியாணி, ரைத்தா செய்து அசத்தினார். அப்போது அவர் பயன்படுத்திய பொருட்களின் பெயரை தமிழில் தெரிந்து கொண்டார். "கல் உப்பு" என அவர் சொன்னது பிரபலமானது.




Click it and Unblock the Notifications
