கொடைக்கானல் போறீங்களா.. நட்சத்திர ஏரியில் யார் பாருங்க.. 24 மணி நேரமும் சுற்றி சுற்றி வரும் 3வது கண்

  • திண்டுக்கல்: கொடைக்கானல் ஏரியில் குற்றங்களை தடுக்க நவீன கேமராவுடன் கூடிய மிதக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் ஏரிப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பலரும் நட்சத்திர ஏரியை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். நட்சத்திர ஏரி சுமார் 59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நட்சத்திர வடிவில் அமைந்திருக்கும் இந்த ஏரி கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா அடையாளமாக விளங்குகிறது.

    Advertisement

    கொடைக்கானல் ஏரி

    இங்கு சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. ஏரியின் அழகை ரசித்தபடியே படகு சவாரி செய்வதற்காகவே பலரும் இங்கு வருகின்றனர். ஏரியை சுற்றியுள்ள சாலையில் குதிரை சவாரி, சைக்கிளிங் செய்வதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா சீசன்களிலும் ஏரிப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த சூழலில், ஏரிப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பது, தண்ணீரில் தவறி விழுபவர்களை விரைவாக மீட்பது, ஏரியை சுத்தமாக வைத்திருப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    சிறிய ரக படகு டிசைனிங்

    சிறிய ரக படகு போல தண்ணீரில் மிதக்கும் வகையில் இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் மதிப்பிலான இதில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் படம் பிடிக்கும் வசதி இருப்பதால், இரவு நேரக் கண்காணிப்புக்கும் இது உதவும்.

    இந்த எந்திரத்தை ரிமோட் மூலமாக இயக்க முடியும். அதேபோல், தானாக இயங்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் ஏரிப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

    கண்காணிப்புப் பணியுடன் ஏரியில் மிதக்கும் குப்பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியையும் இந்த எந்திரம் மேற்கொள்ளும். இதனால் ஏரியைத் தூய்மையாக வைத்திருக்கவும் உதவியாக இருக்கும்... நகராட்சி ஆணையாளர் அரவிந்த், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    Advertisement

    நட்சத்திர ஏரியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு

    வரும் நாட்களில் நட்சத்திர ஏரியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும், ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கொடைக்கானல் ஏரியில் பாதுகாப்பையும் தூய்மையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

    சமீபத்தில்தான் இந்த ஏரி பொலிவிழந்து காணப்படுவதாக புகார்கள் முளைத்தன.. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு நீர்வரத்து குறைந்து, ஏரி வறண்டு பொலிவிழந்து காணப்பட்டது..

    Advertisement

    சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகவும், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த ஏரி, பருவநிலை மாற்றம், குறைவான மழைப்பொழிவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டது மாவட்ட மக்களை கவலைக்குள்ளாக்கியது..

    அதுமட்டுமல்ல, அருகிலுள்ள உணவகங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும், நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஏரியின் இயற்கை அழகையும் நீர்வரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.. இதையடுத்து, கொடைக்கானல் ஏரியின் பொலிவை கட்டிக்காக்க முதல் நடவடிக்கையாக நவீன கேமராவை உலவ விட்டுள்ளது, சுற்றுலா பயணிகளுக்கும் நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

    English Summary

    Kodaikanal Star Lake Gets a Third Eye.. New Camera System to Keep Watch Around the Clock