ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு உச்ச கட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. பல இடங்களில் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இடத்திலேயே வாங்கி கிழித்து போடுகிறார்கள். 16 இடங்களில் இதுபோன்று வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையே கிழித்தெறிந்து மிரட்டி உள்ளார்கள். 31 இடங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. பல இடங்களில் வேட்பார்கள் வேட்புமனு தாக்கல் செய்யவே அஞ்சும் நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மண்டல பரிஷத் பிராந்திய தொகுதி மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதி தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெறறு வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 13 மாவட்டங்களில் 31 தேர்தல் தொடர்பான மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பல வேட்பு மனு தாக்கலின் போது நடந்த மோதல்கள், வேட்பாளர்கள் மீதான நேரடியாக தாக்குதல்கள் மற்றும் வேட்புமனுக்களை அழிக்கும் செயல்கள் ஆகும்.
வேட்புமனுக்களை அழித்த செயலை "ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்" என்று கூறிய ஆந்திர மாநில காவல்துறை தலைமை இயக்குநர், வன்முறை மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுபவர்கள் மீது, அவர்களின் அரசியல் சார்பு (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) எதுவாக இருந்தாலும், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தின் தகவல்படி, ஆந்திராவில் ஒரே நாhளில் 22 சம்பவங்கள் வன்முறை, மோதல்கள் அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் நடந்துள்ளன. மேலும், ஒன்பது மோதல் சம்பவங்களில் வேட்புமனுக்கள் பறிக்கப்பட்டு கிழிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 16 இடங்களில் வேட்புமனுக்கள் பறிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக அனந்தபூரில் அதிகபட்சமாக 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து அன்னமய்யா, கடப்பா, பிரகாசம் மற்றும் திருப்பதி ஆகிய மாவட்டங்களில் தலா 3 சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. சித்தூர், ஸ்ரீ சத்ய சாய் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் தலா 2 சம்பவங்களும்; நெல்லூர், கர்னூல், மார்க்காபுரம், நந்தியால் மற்றும் ஏலூரு ஆகிய இடங்களில் தலா ஒரு சம்பவமும் பதிவாகி இருக்கிறது. இந்த வன்முறைகளின் விளைவாக, இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட நான்கு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகள் தாக்கப்பட்டடுள்ளன. இதில் ஒரு வீடு, ஜேசிபிஐ வைத்து இடித்துத் தள்ளப்பட்டது. ஆறு சம்பவங்களில் கற்கள் மற்றும் குச்சிகளைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த வன்முறையில் ஒரு காவலர் தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு வேட்பாளர் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் பல்வேறு மோதல்களில் காயமடைந்தனர். வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துச் சென்ற காவல்துறை வாகனம் ஒன்றும் கல்வீச்சால் சேதமடைந்தது. இது தவிர, சாலை மறியல் அல்லது போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தும் மூன்று சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் மையங்களின் நுழைவாயில்களிலும், மையங்களுக்கு உள்ளேயும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள்ளும் வேட்புமனுக்கள் பறிக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ செய்துள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. இதில் தெலுங்கு தேசம் கட்சி , ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - CPI(M)) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர் வழக்குகளையும் உள்ளடக்கி மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 11 சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யும் நிலையில் இருக்கிறது. அங்கு 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல் வாகனத்தைத் தாக்கிய கும்பலைக் கலைக்க, காவல்துறை மூன்று முறை தடியடி நடத்தியதுடன், இரண்டு கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியது. மேலும் பல குற்றவாளிகளைக் கண்டறிய, சிசிடிவி காட்சிகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார். நிலுவையில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்யவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும், பதற்றமான வேட்புமனு தாக்கல் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறைச் சம்பவங்கள் குறித்து 100 அல்லது 112 என்ற எண்களை அழைத்துத் தெரிவிக்கலாம் என்றும் டிஜிபி கூறினார்.