"சாப்பிட முடியவில்லை! கண்களை மூடினாலே குழந்தைகள் அலறும் சப்தம்.."! ஜபல்பூர் படகு மாலுமி கண்ணீர்!
போபால்: "ஜபல்பூரில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியானதால் என்னால் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, கண்களை மூடினாலே குழந்தைகள் அழும் சப்தம் கேட்கிறது" என படகின் மாலுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சொகுசுப் படகு விபத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 4 பேரைத் தேடும் பணிகள் 40 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.

படகின் மாலுமி மகேஷ் படேல் இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் கிளம்பும்போது வானிலை சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால், படகை இயக்கிய அரை மணி நேரத்திற்கெல்லாம் அணைக்கு நடுவே சென்றபோது திடீரென காற்று பலமாக வீசத் தொடங்கியது. வானிலை மோசமாக இருப்பதால் திரும்பிச் செல்லுமாறு எந்த எச்சரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அலைகள் படகைத் தாக்கத் தொடங்கியவுடன், நான் படகைத் திருப்ப முயன்றேன்," என்றார்.
படகிற்குள் தண்ணீர் புகுந்தவுடன் பயணிகள் அலறத் தொடங்கினர். உடனே தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மகேஷ் படேல், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாகப் பயணிகளை மீட்க மற்றொரு படகை அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணிகள் தரப்பில் முன்கூட்டியே எச்சரித்தும் மாலுமி படகைத் திருப்பவில்லை என்று கூறப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார். மேலும், "ஆரம்பத்தில் பயணிகள் பலர் நடனமாடிக் கொண்டிருந்ததால் லைஃப் ஜாக்கெட் (Life Jackets) அணிய மறுத்துவிட்டனர்" என்றார்.
படகு மூழ்கத் தொடங்கிய பிறகே ஊழியர்கள் ஜாக்கெட்டுகளை விநியோகித்தனர்" என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
மீட்புப் பணியின் போது, ஒரு தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது காண்போரை கண்கலங்க வைத்தது. அதே நேரத்தில், 72 வயதான ரியாஸ் ஹுசைன் என்ற முதியவர், படகு மூழ்கிய பிறகும் ஒரு சிறிய இடைவெளியில் தலையை மட்டும் உயர்த்தி சுவாசித்தபடி 4 மணி நேரம் போராடி உயிர் பிழைத்தது ஒரு அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து மாலுமி மகேஷ் படேல் மற்றும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். "இது ஒரு இயற்கை பேரிடர். 15 ஆண்டு அனுபவம் கொண்ட நான், தகுந்த உரிமமும் பயிற்சியும் பெற்றுள்ளேன். விபத்தில் தப்பியவர்கள் எல்லாம் பெரும்பாலும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். என்னால் முடிந்தவரை அனைவரையும் காப்பாற்ற முயன்றேன். நான்தான் கடைசியாக அந்த படகில் இருந்து தப்பினேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள். இங்கு கிடைக்கும் மாத சம்பளம் ரூ 27 ஆயிரத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். இந்த விபத்தின் கோரக் காட்சிகளால் என்னால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை," என மகேஷ் படேல் கண்ணீருடன் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, சுற்றுலாத் துறை மூலம் சொகுசுப் படகுகளை இயக்குவதற்கான புதிய 'நிலையான செயல்பாட்டு நடைமுறை' (SOP) உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முக்கியக் குறிப்பு:
உயிரிழப்பு: 11
மீட்கப்பட்டவர்கள்: 26
மாயமானவர்கள்: 4
தேடுதல் பணி: 40 மணி நேரத்தைக் கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.














Click it and Unblock the Notifications