அசைவ ஓட்டல்களுக்கு மூடுவிழா.. இறைச்சி - மீன் - முட்டை விற்க தற்காலிக தடை.. வடமாநிலங்களில் உத்தரவு
போபால்: நவராத்திரி பண்டிகையையொட்டி அக்டோபர் 2ம் தேதி வரை மத்திய பிரதேசத்தின் போபாலில் முட்டை, இறைச்சி மற்றும் மீன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தின் ஹபூரில் அக்டோபர் 2ம் தேதி வரை அசைவ ஓட்டல்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகை நேற்று தொடங்கியது. இந்த பண்டிகை வரும் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். இந்துக்கள் விரதம் இருந்து கடவுள் துர்கா தேவியை வழிபாடு செய்வார்கள்.

இந்நிலையில் தான் நவராத்திரி பண்டிகையையொட்டி மீன், சிக்கன், மட்டன், முட்டை மட்டுமின்றி அசைவ உணவுகள் விற்பனைக்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஹபூரில் நேற்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை அசைவ உணவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‛‛அக்டோபர் 2ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அசைவ ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளை மூட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலதம் போபாலிலும் நேற்று முதல் மீன், முட்டை, சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போபால் எஸ்டிஎம் (Sub Divisional Magistrate ) திவ்யா படேல் பிறப்பித்துள்ளார். இதுபற்றி அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛ செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கியது. இதனால் செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதுதவிர ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை பிரிவாக செயல்பட்டு வரும் இந்து அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலம் குர்கிராம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை நவராத்திரி முடியும் வரை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பை சேர்ந்த சுரேந்திர தன்வார் கூறுகையில், ‛‛இந்துக்களின் மதஉணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இதனால் இறைச்சி, மீன் விற்பனை கடையை மூட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications