பலத்தை நிரூபித்த பாஜக! மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார்? ரேசில் முந்தும் முக்கிய தலைகள்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் கட்சி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே அடுத்த முதல்வர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சியை வீழ்த்தி, பாரதிய ஜனதா கட்சி (BJP) பெரும்பான்மை பலத்துடன் முன்னிலையில் உள்ளது.

பாஜக வெற்றி பெற்றால் முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போவது யார்? அரசியல் வட்டாரங்களில் அடிபடும் டாப் 5 பெயர்கள் மற்றும் அதற்கான காரணங்களை பார்ப்போம்.
சுவேந்து அதிகாரி
ஒரு காலத்தில் மம்தாவின் வலது கரமாக இருந்தவர். 2021-ல் நந்திகிராமில் மம்தாவை நேருக்கு நேர் தோற்கடித்தவர். இந்த தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இவரே முதல்வர் பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் உள்ளார். கள அளவில் கட்சியை ஒருங்கிணைக்கும் திறன் மற்றும் மாநிலம் தழுவிய செல்வாக்கு இவருக்கு இருப்பதால் கட்சி தலைமை இவரை முழுமையாக நம்புகிறது.
சமித் பட்டாச்சார்யா
இவர் முதல்வர் ரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்.பியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1971 முதல் ஆர்.எஸ்.எஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். கட்சியின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு ஆதரவு பெற்றவர். நிதானமான மற்றும் அறிவுசார்ந்த அரசியல்வாதி என்ற பிம்பம் இவருக்கு உண்டு.
திலீப் கோஷ்
ரேசில் 3வது இடத்தில் இருக்கும் இவர், கடந்த 2015-2021 வரை மாநிலத் தலைவராக இருந்து பாஜகவை வங்காளத்தில் ஒரு சக்தியாக மாற்றியவர். அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையவர். ஆக்ரோஷமான பேச்சும், மம்தா பானர்ஜியை நேரடியாக எதிர்க்கும் துணிச்சலும் இவருக்குப் பிளஸ் பாயிண்ட்டுகள்.
அக்னிமித்ரா பால்
ஆசான்சோல் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இவர், ஒரு புகழ்பெற்ற பேஷன் டிசைனர். தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். கட்சியின் பெண் முகமாக முன்னிறுத்தப்படுபவர். மம்தா பானர்ஜிக்கு மாற்றாக ஒரு பெண் முதலமைச்சரைக் கொண்டு வர பாஜக நினைத்தால், அக்னிமித்ரா பாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
ஒரு 'புதிய முகம்'
பாஜகவின் தேர்தல் வரலாறு படி, யாரும் எதிர்பாராத ஒரு நபரையே முதலமைச்சராகத் தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது. ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா, மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் ஆகியோரைப் போல, முதல்முறை எம்.எல்.ஏ அல்லது அதிகம் அறியப்படாத ஒரு மூத்த தலைவரை டெல்லி தலைமை முதலமைச்சராக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த முதல்வர் யாராக இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications