தவெக தூக்கியதாக புகார் எழுந்த எம்எல்ஏவுடன் நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி! விஜய் மீது அட்டாக்
சென்னை: ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே எங்களிடம் இருப்பதனால், அவரை தூக்கினால் கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் எங்க எம்.எல்.ஏவை குறிவைத்து தூக்கி இருக்கிறார்கள். போலி கடிதங்களை நம்பி பிறகு எப்படி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று நள்ளிரவில் மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜுடன் டிடிவி தினகரன் ஆவேசமாக பேசினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரவில் ஆளுநரை சந்தித்து எனது மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏவை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. குதிரை பேரம் நடந்து இருக்கலாம் என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ காமராஜுடன் வந்து புகார்
இந்த சூழலில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆளுநர் மாளிகை வந்தார். இதை அறிந்த டிடிவி தினகரன் மீண்டும் நள்ளிரவில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் விஜய் கடிச் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் தவெகவினர் மீது போலீசில் புகார் கொடுக்க இருப்பதாகவும் கூறினார். அவர் கூறியதாவது: -
விஜய்யின் தவெகவினர் இன்று ஆளுநரை சந்தித்த போது ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆதரவு அளிப்பதாக கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர் ஒரிஜினல் எங்கே என்று கேட்டு இருக்கிறார். அப்போது ஒரிஜினல் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு தவெகவினர் கிளம்பியிருக்கிறார்கள்.
தவெக போலி கடிதம் கொடுத்துள்ளது
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து எனது வேட்பாளருக்கு போன் வந்துள்ளது. நீங்கள் ஆதரவு கொடுத்தீர்களா என்று?.. இதற்கு தான் எனது வேட்பாளர் நான் அந்த மாதிரி லட்டர் கொடுக்கவில்லை என்று கூறினார். நான் நேரிலேயே வந்துட்றேன் என ஆளுநர் மாளிகை வந்துட்டார். நான் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளித்து இருக்கிறேன் என காமராஜ் கூறினார். வாட்ஸ் அப்பில் வந்த ஜெராக்சை தான் தவெகவினர் ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
இது போல் உள்ள கயவாளிகளை, மோசடி சக்திகளை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும். இன்னும் ஆட்சி அமைக்கும் முன்பே இப்படி என்றால் நிலைமை இனி ரொம்ப மோசமாகும். ஆட்சி அமைக்கவிட்டால் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது.
கட்சி தாவல் சட்டம் வராது என்பதால்
யாருடைய பெயரில் வேண்டுமானாலும் கடிதங்கள் கொடுக்க முடியும். இது குறித்து தற்போது ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்கு பிறகு நாங்கள் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்..
ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே எங்களிடம் இருப்பதனால், அவரை தூக்கினால் கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் எங்க எம்.எல்.ஏவை குறிவைத்து தூக்கி இருக்கிறார்கள். போலி கடிதங்களை நம்பி பிறகு எப்படி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.. ஒருத்தருக்கு 108 தான் இருக்கு. ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றால் விஜய் மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் தானே கொடுப்பார்.
சும்மா விட முடியாது
தவெக தான் இந்த கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள். வேறு யார் அனுப்பி இருக்க முடியும். இப்போதே இப்படி இருந்தால் எப்படி, இந்த ஒரு எம்.எல்.ஏ வெற்றிக்கு நாங்கள் எவ்வளவு உழைத்து இருப்போம். அங்கு கடுமையாக உழைத்து பெற்ற வெற்றியை ஒரே ஒரு ஜெராக்ஸ் காப்பி கொடுத்து நீங்கள் குதிரை பேரம்படி தூக்கிடலாம் என செய்திருக்கிறார்கள். இதை நாங்க சும்மா விட முடியாது.. காங்கிரஸ் எப்போதுமே டுபாக்கூர் கட்சி தான்.. வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்து இருப்பதாக சொல்லியிருக்கும் கடிதங்களையும் ஆராய வேண்டும்.. இவ்வளவு அராஜக போக்கு என்றால், நாங்க ஒன்னும் சாதாரணவர்கள் கிடையாது" என்று டிடிவி தினகரன் கூறினார்














Click it and Unblock the Notifications