இரவோடு இரவாக களத்தில் இறங்கிய மம்தா.. ஸ்ட்ராங் ரூமில் 3 மணி நேரம் ஆய்வு! உச்சக்கட்ட பதற்றம்!
கொல்கத்தா: தமிழ்நாடு உடன் சேர்ந்து மேற்கு வங்கத்திற்கும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதிக்கே முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு முதலாம் கட்ட தேர்தல் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமைதியாக நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஆங்காங்கே வன்முறை நடந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக அமைதியாகவே நடந்து முடிந்தது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

போராட ரெடி!
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஸ்ட்ராங் ரூம் ஒன்றில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக முகாமிட்டு அதிரடி காட்டினார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், "இயந்திரங்களைத் தொட முயன்றால் அது வாழ்வா சாவா போராட்டமாக மாறும்.. சாகும் வரை களத்தில் இருந்து போராடவும் தயாராக உள்ளோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மம்தா சரமாரி குற்றச்சாட்டு
நேற்றிரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஷகாவத் மெமோரியல் பள்ளிக்கு மம்தா பானர்ஜி திடீர் விசிட் அடித்தார். இது அவர் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகும். சிசிடிவி காட்சிகளில் முறைகேடுகள் நடப்பதைப் போன்ற காட்சிகள் வெளியானதைப் பார்த்தே, தாம் நேரில் வந்ததாக மம்தா தெரிவித்தார். தொடக்கத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததாகவும், பின்னர் ஒரு வேட்பாளர் என்ற முறையில் தனது உரிமையை நிலைநாட்டி உள்ளே சென்றதாகவும் அவர் கூறினார்.
மம்தா பானர்ஜியின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளது. நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளை உடைக்க பாஜக முயல்வதாக ஒரு வீடியோவை டிஎம்சி பகிர்ந்துள்ளது. அதேபோல இன்னொரு ட்வீட்டில், "மம்தா ஒரு கட்டளை இட்டால், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பகுதியில் 10,000 பேர் திரளுவார்கள்; சட்டத்தின் மீது மதிப்பிருப்பதால்தான் அமைதி காக்கிறோம்" என அக்கட்சி எச்சரித்துள்ளது. மேலும், பாஜக வெளிமாநிலங்களிலிருந்து ஆட்களை இறக்கி நாடகங்கள் ஆடுவதாகவும் டிஎம்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையம் மறுப்பு
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் இது தொடர்பாகக் கூறுகையில், "அனைத்து ஸ்ட்ராங் ரூம்களும் முறையாகச் சீல் வைக்கப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளன; அத்துமீறி யாரும் உள்ளே நுழையவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், தபால் வாக்குகள் பிரிக்கும் பணி குறித்து ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விதிகளின்படியே அனைத்தும் நடப்பதாகவும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மம்தா தடாலடி
எக்சிட் போல் முடிவுகள் குறித்துப் பேசிய மம்தா, அதை ஒரு 'உளவியல் போர்' எனக் குறிப்பிட்டார். 2021 தேர்தலிலும் இதுபோன்ற கணிப்புகளே வந்ததாகவும் இருப்பினும் அதைத் தாண்டி திரிணாமுல் ஆட்சியைப் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் கண்விழித்துக் காவல் காக்குமாறு தனது தொண்டர்களுக்கு அவர் போட்டிருக்கும் உத்தரவு, தேவைப்பட்டால் தானே நேரடியாக வந்தும் கூட கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications