பாகிஸ்தானில் உணவு பஞ்சம்! பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதை எப்படி சமாளிக்கப்போகிறது?
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. இது பாகிஸ்தான் மீதான இமேஜை அதிகரித்திருந்தாலும், மறுபுறம் இந்நாட்டில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இது பாக்., அரசின் நிர்வாக திறன் மீது கேள்விகளை எழுப்புகிறது.
பாகிஸ்தானின் தற்போதைய உணவு நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்த அறிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவு நெருக்கடி அறிக்கை, பாகிஸ்தானை உலகின் மிக மோசமான பசிப் பிணியால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆப்கானிஸ்தான், சூடான் மற்றும் ஏமன் போன்ற நாடுகளுக்கு இணையாகப் பாகிஸ்தானிலும் பசி கொடுமை தீவிரமாக உள்ளது என அறிக்கை தெரிவித்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் சுமார் 1.1 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 93 லட்சம் பேர் நெருக்கடி நிலையிலும், 17 லட்சம் பேர் பஞ்சத்திற்கு முந்தைய நிலையான அவசரகால நிலையிலும் உள்ளனர். இந்த நிலைமைக்கு இரண்டு முக்கிய காரணங்களை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார பலவீனம்: அதிகரித்து வரும் பணவீக்கம் (6% வரை உயரும் எனக் கணிப்பு) மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துள்ளது.
பருவநிலை மாற்றங்கள்: கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பருவமழை மற்றும் திடீர் வெள்ளம் 60 லட்சம் மக்களைப் பாதித்ததுடன், விளைச்சலையும் உட்கட்டமைப்பையும் அழித்தது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் தீவிரமாக உள்ளது. போதிய தரவுகள் இல்லாதது இந்தச் சிக்கலின் தீவிரத்தைக் கண்டறிவதில் தடையாக உள்ளது. ஏற்கனவே வளங்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு உணவளிக்க வேண்டியது பாகிஸ்தானுக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிக மாவட்டங்களில் (43-லிருந்து 68 ஆக உயர்வு) ஆய்வு நடத்தப்பட்டதால், பாதிப்பின் அளவு இன்னும் துல்லியமாகவும் அதிகமாகவும் தெரியவந்துள்ளது. இப்படி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியிருக்கும் நிலையில், சர்வதேச அளவில் ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்தை பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் தொடர்ந்து பாராட்டை பெற்றிருக்கின்றன. ஆனால், இதெல்லாம் இந்த நெருக்கடியை சமாளிக்க கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறிதான்.












Click it and Unblock the Notifications