ரீல்ஸ் மாஸா இருக்கு.. ரியல் தமாஸா இருக்கே! கடைமடைக்குச் சென்று சேருமா காவிரி! வேதனையில் விவசாயிகள்!

  • நாகை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட்டுள்ளார். வழக்கமாக ஜூன் மாதமே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் தான் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுவும் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாகை - மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரியின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேருமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது

    Advertisement

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்போது, காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். வழக்கமாக சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

    Advertisement

    இந்த நிலையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

    காவிரி நீர்

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடைமடை பகுதிகள்

    ஆனால், தற்போது குறைந்த அளவிலான நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆறு, கிளை ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் பல இடங்களில் வறண்டு காணப்படுவதால், இந்த தண்ணீர் நாகை மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேருமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    மேட்டூர் அணை

    கடந்த காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டபோது, மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பூம்புகார் மேலையூர் கதவணைக்கு சுமார் 10 நாட்களுக்குள் தண்ணீர் வந்து சேரும். ஆனால், தற்போது குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வறண்டு கிடக்கும் காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகள், வாய்க்கால்களை நிரப்புவதற்கே அதிக நாட்கள் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    சம்பா சாகுபடி

    தற்போதைய நீர்திறப்பு குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய உதவுமே தவிர, விவசாயத்திற்குத் தேவையான அளவு தண்ணீரை வழங்க போதுமானதாக இருக்காது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடியை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    டெல்டா விவசாயிகள்

    எனவே, காவிரி நீர் பங்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரியில் முறை வைத்து தண்ணீர் திறக்காமல், தமிழகத்தின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு உரிய அளவு தண்ணீரை தொடர்ந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Farmers fear limited Mettur water release may not reach Cauvery delta tail-end regions for samba cultivation.