ஒரு வழியாக பார்முக்கு வந்த ருதுராஜ் கெய்க்வாட்.. சிஎஸ்கே பேட்டிங்கில் நடந்த ஒரே நல்ல விஷயம்!
சென்னை: ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளுக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு வழியாக ஃபார்முக்கு வந்துள்ளார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்த போது 37 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த ருதுராஜ் கெய்க்வாட், கடைசி 23 பந்துகளில் 54 ரன்களை சேர்த்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தவிர்த்து அத்தனை பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே நிதானமாக விளையாடி ஒரு முனையில் விக்கெட் செல்வதை தடுத்து நிறுத்தினார். இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 7 போட்டிகளாக ஃபார்மில் இல்லாமல் தடுமாறினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு நடந்த ஒரேயொரு நன்மை ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்தது மட்டும்தான்.
7 போட்டிகளில் ஆடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 128 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 37 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதன்பின் அடுத்த 23 பந்துகளில் 54 ரன்களை குவித்தார். இதன் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 74 ரன்களை குவித்தார்.
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களில் சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் மட்டுமே ஃபார்மில் இருந்தனர். அதிலும் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக விலகியதால், சஞ்சு சாம்சன் மீது மொத்த பொறுப்பும் விழுந்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்திருப்பதால், சஞ்சு சாம்சன் அழுத்தமின்றி விளையாட முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 6 போட்டிகளில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வலிமையான அணிகளான ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டிய தேவை இல்லை என்பதே ஒரேயொரு சாதகம்.












Click it and Unblock the Notifications