பாஜக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு.. திமுக அதிமுக கூட்டணியா.. வில்சன் எம்பி பதிவு
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராக முயற்சி செய்ததாக குறிப்பிட்டார். இத்தகைய முடிவை எடுக்க வேண்டாம் என்று அதிமுகவினர் அனைவரும் தடுத்த போதும், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் தந்த வில்சன் எம்பி, அதிமுகவில் உள்ள "பாஜக ஆதரவு தரப்பு" தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதாகவும்,திமுக-அதிமுக கூட்டணி பொய் என்றும் கூறினார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் இன்று காலை பேசும் போது, "விஜய் ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் பிறந்தது. நாம் திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி.

நாம் எப்படி திமுக உடன் கூட்டணி வைக்க முடியும். திமுக நம்முடைய கொள்கை ரீதியிலான எதிர்க்கட்சி. அப்படி இருக்க அவர்களுடன் எப்படி இணைய முடியும். அப்படி இருக்க அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார். ஈபிஎஸ் முடிவை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம் . தவெக ஆட்சியை ஆதரிப்பது என அதிமுக எம்எல்ஏக்கள் முடிவெடுத்துள்ளோம்.
அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவெகவுக்கு எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு அளிக்கும். தவெகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம் என்று சிவி சண்முகம் கூறியிருந்தார்.
இது அதிமுக, திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சன் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், அதிமுகவின் பிளவு மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
அதில் வில்சன் கூறும் போது, அதிமுகவில் உள்ள "பாஜக ஆதரவு தரப்பு" தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதாகவும், இதன் மூலம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை உடைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக-அதிமுக கூட்டணி பொய் என்றார். தனது செயல்களை நியாயப்படுத்த எடப்பாடி தரப்பு "அதிமுக-திமுக ரகசியக் கூட்டணி" என்ற பொய்யான கதையைப் பரப்புவதாகவும் வில்சன் குற்றம்சாட்டினார்.
மேலும் விஜய்யின் கூட்டணியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு முரண்பட்ட கட்சிகளும் ஒரே அணியில் சேரப் போகிறதா? என்று கேள்வியும் வில்சன் எழுப்பினார். மேலும் "விஜய் வாக்குறுதி அளித்த மாற்றம் இதுதானா?" என்று கேட்டதுடன், மக்களின் ஆணையை இவர்கள் கேலி செய்வதாகக் குறிப்பிட்டார்.














Click it and Unblock the Notifications