ஆட்சி அமைக்க ஆதரவு கொடுங்க.. விசிக, சிபிஐ, சிபிஎம் தரப்புக்கு விஜய் அனுப்பிய கடிதம்.. அடுத்தது என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக சார்பாக ஆதரவு கோரி விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு விஜய் கடிதம் அனுப்பி ஆதரவு கோரிய நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளுக்கு விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளின்படி தவெக பெரும்பான்மைக்கு அருகாமையில் வந்துள்ள சூழலில், நிலையான ஆட்சியை வழங்க வேண்டி விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் தலைமைக்கு விஜய் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பியுள்ளார். இதன் மூலமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, மக்கள் நலன் சார்ந்த ஒரு புதிய ஆட்சியில் பங்கெடுக்க முன்வருமாறு இக்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு விஜய் ஆதரவு கோரி கடிதம் அனுப்பி இருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஆர்வம் காட்டி இருக்கிறது. அதற்கேற்ப காங்கிரஸ் நிர்வாகி கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி தங்களின் முடிவை அறிவிக்க உள்ளது.
இதன் மூலமாக திமுக - காங்கிரஸ் இடையிலான நீண்ட கால கூட்டணி முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் இணையும் பட்சத்தில், திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் விசிக கூட்டணி ஆட்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டும் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆளுநர் அர்லேகர் சென்னை வரவுள்ள நிலையில், விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அடுத்த சில நாட்களில் ஏற்படும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் தவெக தரப்பில் அதிமுக எம்எல்ஏ-க்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனை செங்கோட்டையன் மூலமாக விஜய் மேற்கொண்டு வருகிறார். இதனால் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications