திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு படித்து வரும் 3 சிறுமிகளும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் 3 சிறுமிகளையும் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி ஜோதி. இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களது மகள்கள் மகாலட்சுமி, மகேஷ்வரி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவரது உறவினர் மகள் நித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நித்யா அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். மகாலட்சுமி மற்றும் மகேஷ்வரி பெற்றோர் இல்லாததால் அங்குள்ள பஜனை தெருவில் உறவினர்களுடன் தங்கி படித்து வந்தார். வழக்கம்போல் இன்றும் சிறுமிகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலையில் பள்ளி சென்ற மாணவிகள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சிறுமிகளின் உறவினர்கள் அப்பகுதியில் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் காணாததால் அச்சமடைந்த உறவினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமிகள் எங்கு சென்று இருப்பார்கள் எனவும், யாரும் கடத்தி சென்றனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போன்று சேலம் ஓமலூரில் காணாமல் போன 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓமலூரில் காணாமல் போன சிறுவர்கள் 4 பேரையும் குமாரபாளையத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு ஒன்று இருக்கிறதாகவே தெரியவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் திருவண்ணாமலையில் 3 சிறுமிகள் மாயமாகிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.3 சிறுமிகள் மாயம்
சேலத்தில் 4 சிறுவர்கள் மீட்பு