ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்ற நபர்.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? அதிரடி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். சிவபெருமானின் வாகனமாகப் போற்றப்படும் நந்தியின் மீது அண்ணாமலையார் எழுந்தருளும் இந்த வாகனத்தின் மீது ஏறி நின்று சுத்தம் செய்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோயில் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிஷப வாகன வீதி உலா. திருவிழாவின் 5ம் நாள் இரவில் நடைபெறும் இந்த வாகனச் சேவையின்போது, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

Tiruvannamalai Rishabha Vahanam

திருவண்ணாமலை தங்க ரிஷப வாகனம்

இதில் அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளும் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவபெருமானின் வாகனமாகவும், தர்மத்தின் அடையாளமாகவும் போற்றப்படும் நந்தியின் மீது அண்ணாமலையார் எழுந்தருளி வீதி உலா வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோயில் கோபுரங்களைச் சுத்தம் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கோயில் பணியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நாளான 24ம் தேதி அதிகாலையில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அதே நாளில் மாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி கோயிலில் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயிலில் உள்ள நவகோபுரங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல், பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

ரிஷப வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள்

இதன் ஒரு பகுதியாக, கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது கோயிலில் சுவாமி வீதி உலா செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ரிஷப வாகனத்தின் மீது ஏறி தீயணைப்பு வீரர்கள் கோபுரங்களைச் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல் வெளியானதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோபுரங்களை சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக சிவபெருமானின் வாகனமாக போற்றப்படும் நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியது பக்தர்களின் இறை நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இந்த சம்பவத்துக்காக கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கோயில் ஊழியர் சஸ்பெண்ட்

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரத்தில் கோயில் பணியாளர் அசோக் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து தீயணைப்புப் படையினரும் கோயில் நிர்வாகத்திடம் கடிதம் அளித்துள்ளார்களாம்..

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நேரத்தில், ரிஷப வாகனம் தொடர்பான இந்தச் சர்ச்சை பக்தர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+