சட்டையை மடிச்சுவிட்டு.. களத்தில் இறங்கினால் இவர் தான் அடுத்த ஒபாமா.. யார் இந்த ஜான் ஒசாஃப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசியல் களத்தில் ஜனநாயக கட்சியின் இளம் தலைவரான ஜான் ஒசாஃப் தற்போது அதிகம் கவனிக்கப்படும் நபராக உருவெடுத்துள்ளார். டிரம்ப்புக்கு இந்த தேர்தலில் அதிர்ச்சி கொடுத்த முக்கியமான இளம் தலைவர்களில் ஒருவராக ஒசாஃப் இருக்கிறார். யார் இவர்.. ஏன் இவரை இளம் வயது ஒபாமா என அழைக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இப்போது நடந்து முடிந்த மிட் டேர்ம் தேர்தல் டிரம்பிற்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுப்பதாகவே இருக்கிறது. அவரது குடியரசு கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக டிரம்பால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விரும்பிய சட்டத்தை கொண்டு வர முடியாமல் போகும்.

ஜான் ஒசாஃப்
இதற்கிடையே அமெரிக்காவின் அரசியல் களத்தில் ஜனநாயக கட்சியின் இளம் தலைவரான ஜான் ஒசாஃப் தற்போது அதிகம் கவனிக்கப்படும் நபராக உருவெடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு வயது வெறும் 33. அப்போது இவரை எதிர்பாராமல் வென்ற எம்பி என்றே குறிப்பிட்டனர். மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், தற்போது அதே மாகாணத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
டிரம்ப்
குறிப்பாக 2024 அதிபர் தேர்தலில் ஜார்ஜியாவில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அப்படி இருந்தாலும் ஒசாஃப் தனது செல்வாக்கின் மூலம் இந்த முறை அங்கு வென்றுள்ளார். இப்போது 39 வயதான ஒசாஃப்வை பலரும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் ஒப்பிடுகின்றனர். அவரது பேச்சாற்றல், இளமையான தோற்றம், அரசியல் அணுகுமுறை ஆகியவை ஒபாமாவை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதனால் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மிட் டேர்ம் தேர்தலை சந்தித்த ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்களில் மிகவும் சவாலான சூழலில் இருந்தவர் ஒசாஃப். டிரம்ப் 2024இல் வெற்றி பெற்ற மாகாணத்தில், செனட் இடத்தை தக்கவைக்க போராடிய ஒரே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இவர்தான். செனட் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றும் கட்சியின் முயற்சிக்கு அவரது வெற்றி முக்கியமானதாக இருந்தது.
வரவேற்பு
தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒசாஃப், அவரது அரசு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் விமர்சித்தார். டிரம்ப் ஆதரவாளர்களை 'எப்ஸ்டீன் கிளாஸ்', 'மார்-ஏ-லாகோ மாஃபியா' என்று அவர் குறிப்பிட்ட பேச்சுகள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய அவர், "அமெரிக்க மக்கள் ஒழுக்கக்கேடு, ஊழல் மற்றும் திறமையின்மையை நிராகரித்துள்ளனர். ஒரு அதிபரின் தவறுகளை தடுப்பது மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்வதே எங்களின் நோக்கம்" என்றும் தெரிவித்தார்.
யார் இந்த ஜான் ஒசாஃப்?
1987ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அட்லாண்டாவில் பிறந்தவர் தாமஸ் ஜோனாதன் ஒசாஃப். யூதக் குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை ரஷ்யா மற்றும் லிதுவேனிய யூத வம்சாவளியை சேர்ந்தவர். தாயார் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். கிழக்கு ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து தப்பி வந்தவர்கள் அவரது தந்தை வழி தாத்தா- பாட்டி. ஹோலோகாஸ்ட் கொடுமைகளில் இருந்து உயிர் பிழைத்த உறவினர்களுடன் வளர்ந்த அனுபவத்தை பற்றியும் ஒசாஃப் பேசியுள்ளார்.
17 வயதில் அமெரிக்க சிவில் உரிமை போராட்ட தலைவர் ஜான் லூயிஸின் சுயசரிதையை படித்த ஓசாஃப், அவரிடமே வேலை கேட்டு கடிதம் எழுதினார்.. இதையடுத்து லூயிஸ் அவருக்கு வேலை கொடுத்து பயிற்சியும் கொடுத்தார். பின்னர் அவரே ஒசாஃபின் அரசியல் வழிகாட்டியாகவும் மாறினார்.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ஒசாஃப், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர் ஜார்ஜியா காங்கிரஸ் உறுப்பினர் ஹாங்க் ஜான்சனிடம் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த புலனாய்வு ஆவணப்பட நிறுவனமான இன்சைட் TWIயின் சிஇஓவாக பதவியேற்றார்..
2017ல் முழுநேர அரசியலுக்கு வந்த அவர், தனது முதல் தேர்தலில் ஜார்ஜியாவில் போட்டியிட்டார். இருப்பினும், அதில் குடியரசு கட்சி வேட்பாளர் கரேன் ஹேண்டலிடம் தோல்வியடைந்தார். ஆனால் 2021இல் செனட் தேர்தலில் வெற்றி பெற்று, இளம் வயது எம்பியானார்..
அடுத்து ஒபாமா
ஒபாமாவை போலவே சிறந்த பேச்சாளராகவும், முற்போக்கு கொள்கைகளின் கலவையான அணுகுமுறையை கொண்டவராகவும் ஒசாஃப் பார்க்கப்படுகிறார். தேர்தல் கூட்டங்களில் சட்டையை மடித்துவிட்டு கொண்டு பேசும் அவரது தோற்றமும் ஒபாமாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. முன்னாள் அதிபர் ஒபாமாவும் தேர்தல் பிரசாரத்தின்போது ஒசாஃபுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
