வாழ பிடிக்கவில்லை.. ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய முதலை! என்ன நடந்தது?
பெங்களூர்: வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள ஆற்றில் குதித்த நிலையில் அவரை அங்கிருந்த முதலை காப்பாற்றியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. இது உண்மை தான். கர்நாடகாவில் நடந்த இந்த வித்தியாசமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. ஆனால் இன்று பலரும் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து விடுகின்றனர்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசினால் அதற்கு தீர்வு கிடைக்கும்.
இதனால் பிரச்சனைகளை பேசியே முடிக்க வேண்டும். ஒருவரின் தற்கொலை அவரது குடும்பத்தை பாதிக்கும். பெற்றோர், கணவன், மனைவி, குழந்தைகளை துயரத்தில் தள்ளிவிடும். இதனால் யாரும் தற்கொலை செய்யக்கூடாது.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண் தற்கொலை செய்ய ஆற்றில் குதித்தபோது அவரை முதலை காப்பாற்றி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
நேற்று இரவு திடீரென்று மங்களூர் அருகே குக்கே சுப்பிரமணியா பகுதியில் உள்ள குமராதாரா ஆற்றில் இருந்து பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அங்கு தங்கும் விடுதியில் இருந்த ஊழியர்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உள்ளூர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் வேகமாக ஓடிச்சென்று ஆற்றுக்குள் 'லைட்' அடித்து பார்த்தனர்.
அப்போது பெண் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி அவரை மீட்டனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதுபற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், தற்கொலை செய்ய ஆற்றுக்குள் குதித்ததும் தெரியவந்தது. தனிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த அந்த பெண் விரக்தியடைந்துள்ளார். இதனால் நேற்று இரவு அவர் குமாரதாரா ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றதும், அந்த சமயத்தில் முதலை அவரை கடித்ததும் தெரியவந்தது.
ஆற்றில் விழுந்து தற்கொலை செய்ய துணிந்த அந்த பெண்ணுக்கு முதலை கடித்ததால் பயம் ஏற்பட்டதும், இதனால் அவர் கூச்சலிட்டு ஆற்றில் இருந்து வெளியேற முயன்றதும் தெரியவந்தது. இதன்மூமல் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கடித்த முதலை காப்பாற்றி உள்ளார். ஒருவேளை முதல் கடிக்காமல் இருந்தால் அந்த பெண் ஆற்றில் தற்கொலை செய்து இருக்கலாம்.
தற்போது முதலை கடித்ததில் அந்த பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குசிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண்ணுக்கும், வந்திருந்த குடும்பத்தினருக்கும் அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications
