நடிகர் ஜனகராஜ்க்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து.. வாழ்க்கையே மாறி போச்சு.. நண்பர் பகிர்ந்த விஷயம்


  • சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியால் ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்த நடிகர் ஜனகராஜின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து நடிகர் அண்ணாதுரை பகிர்ந்த தகவல் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. திரையில் நம்மை சிரிக்க வைத்த மனிதர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மரணப் போராட்டத்தை கடந்திருக்கிறாரா என்ற அதிர்ச்சியையே இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த முக்கிய குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜனகராஜ். நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனித்துவமான உடல்மொழி, குரல் மாடுலேஷன், முகபாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் அவரை முழுவதுமாக மாற்றிவிட்டதாக அண்ணாதுரை கூறியுள்ளார்.

    Advertisement

    நடிகர் அண்ணாதுரை பேட்டி

    அண்ணாதுரை பேசுகையில், ஒரு முறை ஜனகராஜ் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாராம். அது இரவு நேரம். சாலையில் அமைதியாக கார் சென்று கொண்டிருக்கும்போது திடீரென காரில் பலமாக ஏதோ ஒன்று மோதிய சத்தம் கேட்டதாம். அதைக் கேட்ட அனைவரும் பதறியிருக்கிறார்கள்.

    ஆனால் "யாரோ கல்லெறிந்திருக்கலாம்... பெரிய விஷயம் எதுவும் இருக்காது... போயிடலாம்" என்று சொல்லிவிட்டு பயணத்தை தொடர்ந்தாராம் ஜனகராஜின் டிரைவர். அப்போது அவருக்கும் பெரிய பாதிப்பு எதுவும் தெரியவில்லை.

    நடிகர் ஜனகராஜ்க்கு ஏற்பட்ட விபத்து

    சில நேரம் கழித்து தூங்கிக் கொண்டிருந்த ஜனகராஜின் தோள்பகுதி ஈரமாக இருப்பதை அருகில் இருந்த நண்பர் கவனித்திருக்கிறார். உடனே காரில் விளக்கை போட்டுப் பார்த்தபோது, ஜனகராஜின் நாடி அருகே கல் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதும், ரத்தம் வழிந்துகொண்டிருப்பதும் தெரியவந்ததாம். அந்த நொடி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். உடனே ஜனகராஜை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

    Advertisement

    உயிர் தப்பிய அதிசயம்

    "அந்த நேரத்தில் அவர் உயிரிழந்திருக்க கூடும். எப்படியோ கடவுள் காப்பாற்றிவிட்டார்" என்று அண்ணாதுரை உருக்கமாக கூறியுள்ளார். ஆனால் அந்த விபத்தின் தாக்கம் அங்கேயே முடிந்துவிடவில்லை. ஜனகராஜின் முக அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும், குறிப்பாக அவரது வாய் சற்று கோணலாக மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சினிமாவின் ஆரம்ப கால படங்களை பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம்-ஜனகராஜின் ஆரம்ப தோற்றம் பின்னர் நாம் பார்த்த தோற்றத்திலிருந்து மாறுபட்டிருந்தது. ஆனால் அதையே தனது பலமாக மாற்றிக் கொண்டது தான் அவரது பெருமை. வாய் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் வந்த வித்தியாசமான குரல் உச்சரிப்பு, தனித்துவமான பேச்சு முறை-அவை பின்னர் ஜனகராஜின் டிரேட்மார்க் ஆகிவிட்டன.

    Advertisement

    திறமை முன்பு குறை தோற்றது

    பலர் தங்கள் குறைகளை மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஜனகராஜ் தனது குறையாக இருந்த விஷயத்தையே ரசிகர்கள் விரும்பும் அடையாளமாக மாற்றிக் கொண்டார். அதனால்தான் அவர் சாதாரண நடிகராக அல்ல, தனித்துவமான கலைஞராக நினைவில் இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், தளபதி, பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த ஜனகராஜ், ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார். குறிப்பாக கமல்ஹாசனுடன் அவருடைய காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்களின் ஃபேவரிட். ஜனகராஜ் ஐ பார்க்கும்பதெல்லாம் கமல்ஹாசன் "குரு" என்று மரியாதையுடன் அழைப்பார் என்று அண்ணாதுரை கூறியிருப்பதும் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

    Advertisement

    இப்போது வயது காரணமாக திரைப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும், ஜனகராஜின் வசனங்களும் நடிப்பும் இன்னும் ரசிகர்களின் நினைவில் புதிதாகவே இருக்கிறது. திரையில் நம்மை சிரிக்க வைத்த ஒரு மனிதர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வேதனையை கடந்து வந்திருக்கிறார் என்பது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

    English Summary

    Veteran Tamil actor Janagaraj reportedly survived a life-changing accident that nearly cost him his life, according to actor Annadurai. Sharing the incident in a recent interaction, Annadurai said Janagaraj was travelling from Puducherry to Chennai with friends late at night when a sudden impact hit the car. Initially dismissed as a stone thrown at the vehicle, the group later discovered Janagaraj had suffered a serious neck-area injury and was bleeding heavily. He was rushed to the hospital and narrowly survived. Annadurai also claimed the accident caused visible changes to Janagaraj’s facial appearance, including the distinct expression and speech style that later became part of his trademark screen presence. Fans have been left emotional learning about the hardship behind the beloved actor’s iconic persona.