தீப ஒளி கோலாகலம்!

Subscribe to Oneindia Tamil

Diwali Lamp
தீப ஒளி அல்லது ஒளி வெள்ளத்தின் பேரணி என்ற பொருள் படும் தீபாவளி திருநாள், இந்தியாவின் முதன்மைக் கொண்டாட்டங்களில் ஒன்று. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மதத்தினரும் சிறப்புற கொண்டாடும் பண்டிகையாக இது திகழ்கிறது.

இந்துக்களைப் போலவே சீக்கியர்களும், ஜைனர்களும் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

வரலாறுகள் பல..:

தீபாவளிக்கு பல கதைகள், சரித்திரங்கள், வரலாறுகள், பின்னணிகள் உள்ளன. ஆனால் அத்தனையிலும் பொதுவான கருத்தாக அமைந்திருப்பது - அல்லது தேயும், நல்லது மலரும் என்பதே.

நேபாளத்தில் நேவார் புத்த மதத்தினர் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வட மாநிலங்கள் பலவற்றில் தீபாவளி அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்களது கால்நடைகளுக்கு தீபாவளி விருந்து விவசாயிகள் கெளரவிக்கின்றனர் - நம்ம ஊர் மாட்டுப் பொங்கல் போல.

புதுக் கணக்கு தொடங்கும் நாளாக இதை தொழிலதிபர்களும், வியாபாரம், வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

தீபாவளியன்று லட்சுமி விரதம் இருப்பது வட இந்தியாவில் வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும், வன வாசத்தை முடித்து விட்டு ராம பிரான் தம்பி லட்சுமணன், மனைவி சீதையுடன் தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பினார் என்பதும் வரலாறு. ராமரை வரவேற்கும் வகையில் வீடுகள் தோறும் தீபங்களை அயோத்தி மக்கள் ஏற்றி வைத்திருந்தனர் என்று ராமாயனம் கூறுகிறது. இதை ைவத்துத்தான் தீபாவளி என்ற பெயரும் வந்ததாக ஒரு கூற்று உள்ளது.

தென்னிந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான காரணம் வேறாக உள்ளது. அரக்கன் நரகாசுரசனை கிருஷ்ணர் வதம் புரிந்த நாளே தீபாவளியாக தென்னிந்தியர்களால் கொண்டாடப்படுகிறது.

ஜைனர்கள் தீபாவளியை, மகாவீரர் முக்தி பெற்ற நாளாக கொண்டாடுகின்றனர். இதே தினத்தில்தான் கி.மு. 527ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி மகாவீரர் முக்தி பெற்றார்.

சீக்கிய மதத்தில், சீக்கியர்களின் 6வது குருவான குரு ஹரிகோபிந்த் ஜி சிறையிலிருந்து மீண்ட நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ஹரிகோபந்த்ஜியுடன் 52 இந்து மன்னர்களும் இதே நாளில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையான பின்னர் ஹரிகோபிந்த் ஜி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்றார். அங்கு அவரை சீக்கியர்களும், பிற மதத்தினரும் பெரும் திரளாக சென்று வரவேற்றனர். அவரது வருகையை கொண்டாடும் வகையில், தீபங்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தனர். எனவே இந்த நாளைத்தான் அவர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

இப்படி தீபாவளிக்கு பல்வேறு வகையான பின்னணிகள், வரலாறுகள், புராணங்கள் உள்ளன.

விளக்கேற்றி கொண்டாடுவோம்..:

இருள் அரக்கனை அகற்று வெற்றிப் பிரகாசத்தைக் கொடுப்பது என்பதே தீபாவளி என்பதின் அர்த்தமாக உள்ளது. தீபாவளி என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இன்று அனைத்து மொழிகளிலுமே இது தீபாவளி அல்லது தீவாளி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

தீபாவளியன்று எண்ணெய் ஊற்றி, திரி வைத்து அகல் விளக்குகளை ஏற்றும் பழக்கம் இந்துக்களிைடேய உள்ளது. வீட்டுக்குள் நல்ல சக்திகள் வர வேண்டும், வீட்டிலிருக்கும் தீயவை வெளியேற வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் இந்துக்கள் விளக்கேற்றி இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை உண்டு, பட்டாசுகளைக் கொளுத்தி கொண்டாடுவது பொதுவான அம்சமாக இந்தியா முழுவதும் உள்ளது.

5 நாள் கொண்டாட்டம்:

தீபாவளியை வட இந்தியாவில் 5 நாள் கொண்டாட்டமாக வைத்துள்ளனர்.

முதல் நாளை வாசு பரஸ் என்றும், 2வது நாளை தன் தேராஸ் என்றும், 3வது நாளை நரக சதுர்தசி என்றும், நான்காவது நாளை லட்சுமி பூஜையாகவும், ஐந்தாவது நாளை கோவர்த்தன பூஜையாகவும் வட இந்திய இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

இதில் லட்சுமி பூஜைதான் வெகு விசேஷமானது என்பது குறிப்பிடத்தக்கது. வளத்தையும், நலத்தையும் அருள்பவர் லட்சுமி. எனவே தீபாவளி நாளன்று லட்சுமிக்கு நன்றி கூறும் வகையிலும், நலத்தையும், வளத்தையும் அருள வேண்டும் என வலியுறுத்தியும் லட்சுமி பூஜை செய்கின்றனர்.

வெளிநாடுகளிலும் விசேஷம்...:

தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜப்பான், பிஜி, நியூசிலாந்து, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், சூரினாம், கனடா, கயானா, மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தீபாவளியை இந்தியர்களும், வெளிநாட்டினரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

நேபாளத்தில் தீபாவளிக்கு திஹார் அல்லது ஸ்வாந்தி என்று பெயர் வைத்துள்ளனர்.

கரீபியின் தீவான டிரினிடாட் டொபாகோவில் தீபாவளி நகர் என்ற பெயரிலேயே ஒரு பகுதி உள்ளது. அங்கு அனைவரும் கூடி தீபாவளியை விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். நடனம், நாடகம் என தடபுடலாக அவர்கள் கொண்டாடுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பது விசேஷமானதாகும்.

மலேசியாவில் ஹரி தீபாவளி என்ற பெயரில் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு மலேசியாவில் அரசு விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சவாளியினருடன் சேர்ந்து மலேசியர்களும் பெரும் திரளாக தீபாவளியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

சிங்கப்பூரிலும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும். இங்கும் அரசு விடுமுறை விடப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் இணைந்து தீபாவளியை தடபுடலாக கொண்டாடுவது வழக்கம்.

பட்-படார்:

தீபாவளி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது பட் படார் பட்டாசுகள்தான்.

பட்டாசுகளை வெடித்தால்தான் தீபாவளி பண்டிகை நிறைவு பெறும். விதம் விதமான பட்டாசுகளையும், கலர் கலரான மத்தாப்புக்களையும் வெடித்தும், கொளுத்தியும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாரபட்சம் இல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பினரும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

இப்படி கொளுத்தும்போதும், வெடிக்கும்போதும் யாருக்கும் எந்த தீங்கும் வராமல் பார்த்துக் கொண்டால் தீபாவளி தித்திப்பாகவும், மத்தாப்பாகவும் அமையும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+