போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் - 5 பேர் சுகவீனம்

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர்.
பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.
சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணி ஜெயமணி, குளுக்கோஸ் ஏற்ற வேண்டாம். நான் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்று கூறி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
வாபஸ் பெற ராமதாஸ் கோரிக்கை
இதற்கிடையே, பெண்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உண்ணாவிரதம் இருந்தவர்களில் திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், கவலைக்கிடமான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அங்கேயும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக சேதிகள் தெரிவிக்கின்றன. அத்துடன், உண்ணாவிரதம் இருந்து வருபவர்களில் மேலும் சிலரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஈழத் தமிழர்களின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதற்காக இங்குள்ள தமிழர்கள் தங்களை வருத்திக் கொள்வதும், அதற்காக உயிர் துறப்பதும் வருத்தம் தரும் நிகழ்வுகள் ஆகும். இதனை ஈழத் தமிழர்களே விரும்பமாட்டார்கள்.
எனவே, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள பெண்கள் கூட்டமைப்பினர் இத்துடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications