மதுரையில் சீனப் பெண்ணுக்கும், தமிழருக்கும் கல்யாணம்!
மதுரை: மதுரையைச் சேர்ந்த யோகா ஆசிரியருக்கும், சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி மதுரையில் கோலாகலமாக கல்யாணம் நடந்தேறியது.
சீனாவைச் சேர்ந்தவர் உசின் மெய். 26 வயதாகும் இவரும், மதுரையைச் சேர்ந்த யோகா ஆசிரியர் சிவானந்தமும் (25) காதலித்து வந்தனர்.
மதுரைக்கும், சீனாவுக்கும் இடையே காதல் மலர்ந்த கதை சுவாரஸ்யமானது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கின் வட மேற்கில் உள்ள குவாங் ஷூவுக்கு யோகாவைப் பரப்புவதற்காக சென்றிருந்தார் சிவானந்தம். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மெய், சிவானந்தத்துடன் இருந்து கவனித்துக் கொண்டார். அவரும் கூட ஒரு யோகா ஆசிரியைதான். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது, வளர்ந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். தமிழ்நாட்டு முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் மெய். இதற்காக தனது பெயரைக் கூட லட்சுமி என மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயமானது. மதுரையில் குடும்பத்தினர், உறவினர்கள், உற்றார், நண்பர்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
இந்த 'சிந்தியா' (2005ம் ஆண்டு அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய ஒரு நூலில் இந்த சிந்தியா - CHINDIA- என்ற வார்த்தை இடம் பெற்றது. சீனா, இந்தியா என்பதை இணைத்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியிருந்தார் ரமேஷ்) கல்யாணத்திற்கு ஏகப்பட்ட பேர் வந்திருந்து, இந்திய - சீன மன இணைப்பை ஆசிர்வதித்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications