குற்றாலம் படகுப் போட்டியில் தென்காசி பெண்கள் முதலிடம்
குற்றாலம்: குற்றாலத்தில் இன்று நடந்த படகு போட்டியில் தென்காசியை சேர்ந்த பெண்களும், ஆண்கள் பிரிவில் குற்றாலத்தை சேர்ந்த ஆண்களும் வெற்றி பெற்றனர்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
8வது நாளான இன்று நிறைவு விழா நடைபெறுவதை ஓட்டி காலை 11 மணிக்கு ஐந்தருவி படகு குழாமில் படகு போட்டி நடந்தது. போட்டியை குற்றாலம் பேரூராட்சி துணை தலைவர் ராமையா தொடங்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பிஆர்ஓ ரவீந்திரன், ஏபிஆர்ஓ நாவஸ்கான், சுற்றுலா அலுவலர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிதனியாக படகு போட்டி நடத்தப்பட்டது. முதலில் பெண்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் 28 பேர் கலந்து கொண்டனர்.
இதில் தென்காசியை அடுத்த இலத்தூரை சேர்ந்த சுப்புலெட்சுமி, பார்வதி, சரஸ்வதி, அழகம்மாள் ஆகியோர் முதலிடத்தையும், இதே ஊரை சேர்ந்த ராஜம்மாள், காளியம்மாள், மல்லிகா, தேவி ஆகியோர் இரண்டாமிடத்தையும், செங்கோட்டையை சேர்ந்த சித்ரா, பேச்சியம்மாள், கலா, சுசீலா ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
ஆண்கள் பிரிவில் நடந்த போட்டியில் 24 பேர் கலந்து கொண்டனர். இதில் குற்றாலத்தை சேர்ந்த அருள்ராஜ், கனகராஜ் ஆகியோர் முதலிடத்தையும், இதே ஊரை சேர்ந்த கண்ணன், மாரி ஆகியோர் இரண்டாமிடத்தையும், திருச்சி புதுக்கோட்டையை சேர்ந்த கருணாநிதி, சரவணன் ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications