For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியார் பேசுகிறார்

By Staff
Google Oneindia Tamil News

Periyar
- தொகுப்பு: மதுக்கூர் இராமலிங்கம்

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய்தவர். அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளிமையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர்.

இரு தினங்களுக்கு முன் அவரது நினைவு நாள். அவரை வாஞ்சையோடு நினைவுகூர்த்தது தமிழ் சமுதாயம். இதையொட்டி பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்:

“நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன்". (புரட்சி 17-12-1933).

“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்." (குடியரசு 11.9.1927)

“சிலரின் அருவருப்புக்கோ, கோபத்திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ்விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்... .... ... ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத்தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம்பிய உணர்ச்சியை - உடனே உதறித் தள்ளுங்கள்." (வைக்கம் வீரர் சொற்பொழிவு 1923).

உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது; நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை; துணி துவைப்பதில்லை; மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள்; மது அருந்துகிறீர்கள்; இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேட்டி துவைக்காமலும், குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர்கள் உணர்வதில்லை. உங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என்றால், குளிப்பது எப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடப் பிறந்தவையா என்று கேட்கிறேன்.

குளிக்கவும், வேட்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல், மகந்துகள் என்போரை கொண்டு வந்து வீட்டில் அடைத்துவைத்து விட்டால், அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும், வாயும் நாற்றமடிக்காமல் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்! நாமே ஒருவனை பட்டினிப் போட்டுவைத்து, அவர் இறந்துபோன பிறகு பட்டினியால் இறந்து போய்விட்டான், பாவி என்று சொன்னால் யார் பாவி என்று நினைத்துப் பாருங்கள். (குடியரசு 25-4-1926)

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாகும். (குடியரசு 22.8.1926).

பொதுமக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்பவர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் ஆணுக்கு பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரேயானால் முதலில் அந்த கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலாவதாக அவர்களை கற்பு என்ற சங்கிலியில் கட்டிப்போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்! கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலும் கூடாது. கூடவே கூடாது!

வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவர்களையும் கற்பு எனும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கிக் கட்டப்படட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஒருபிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசைகொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் பொறுப்பும் இல்லை. (26.11.1928 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டு தலைமையுரையில்).

“வர்ணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வர்ணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வர்ணாசிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப் பார்த்தால் இந்தக் கொள்கை தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது." (குடியரசு 7.8.1927)

“ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான்.. இது உண்மை; வாய்ப்பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால் மல உபாதைக்கு சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண்ணீரை விட்டு கழுவிவிட்டால் அந்த குற்றம் போய்விடுவதாக கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனை தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனைத்துக் குளித்தால் ஒழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள்... ஆகவே ஜாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். ஜாதி வித்தியாசத்தை போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வர வேண்டும். (திராவிடன் 5.10.1929)

1933ம் வருடம் மே மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையாரால் மே தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். உலகெங்கும் கடந்த 50 வருடமாக மேதினத்தை ஒரு பெருநாளாகத் தொழிலாளர்கள், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர் களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.(குடியரசு 14.5.1933)

கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டெரிய ஆரம்பித் திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்காவின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது. (22.2.1950)

முக்கிய நண்பர்களில் பலர் உடல் நிலையை கவனிக்கும்படிக்கும், ஓய்வெடுத்துக் கொள்ளும்படிக்கும் எழுதிவருகிறார்கள். ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய சமயம் நமக்குத் தெரியும். அதாவது, நமது தொண்டு நாட்டுக்கு உதவாது என்றாவது, நமது தொண்டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்குத் தெரிந்தால் யாரிடமும் சொல்லாமலும் நாமே ஓய்வெடுத்துக்கொள்வோம். அதுவரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு. உண்மையான ஓய்வாகாது (17-7-1927)


நன்றி: தீக்கதிர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X