புளியங்குடி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

புளியங்குடி அருகே உள்ள வெள்ளான்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி, வேல்சாமி, சண்முகையா, கந்தையா ஆகியோருக்கு சுப்பிரமணியாபுரம் அருகே திருக்குளத்து பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
அதில் தென்னை, வாழை, நெல் சாகுபடி செய்து வரும் நிலையில், வடபகுதியில் உள்ள மேடான பகுதியை விவசாயம் செய்யாமல் தரிசாக விட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த நிலத்தை பயிர் செய்ய டிராக்டர் மூலம் உழுதனர். அப்போது இரண்டரை அடி உயரமுள்ள முதுமக்கள் தாழி நிலத்தில் புதைந்திருந்ததை கண்டனர்.
அதில் மனித எலும்பு கூடும், பல நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மண் பாண்ட பொருட்கள், விளக்குகள், உள்ளிட்டவை இருந்தன.
இதுகுறித்து அங்குள்ள மூதாட்டி ஒருவர் கூறுகையில், 'பழங்காலத்தில் சாகும் தருவாயில் உள்ள முதியவர்களை அவர்களது ஆலோசனையி்ன் படி இதுபோன்ற பெரிய மண் தாழிகளில் வைத்துவிடுவார்கள்.
அதனுள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், தாழியின் வாய்பகுதியை பெரிய மண் மூடியால் மூடி நிலத்தில் மேலோட்டமாக தெரியும் வகையில் புதைத்து விடுவார்கள்.
பின்னர் தினசரி சென்று அந்த மூடியை ஒருவர் திறந்து பார்த்து வருவார். முதியவர் இறந்தது தெரிந்ததும் முழுவதுமாக மூடி விடுவார்கள்' என்று தெரிவித்தார்.
வயல் பகுதியில் முதுமக்கள் தாழி கிடைத்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரளாக வந்து பார்த்து சென்றனர்.












Click it and Unblock the Notifications