செம்மொழி மாநாட்டு பணிகளில் 1,000 மாணவர்களை ஈடுபடுத்த முடிவு
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஆராய்ச்சியாளர்கள், விருந்தினர்களுக்கு வழிகாட்டவும், ஒருங்கிணைக்கவும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரம் முதுகலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், 'தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடைபெற உள்ள ஆய்வரங்கம் தொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி தமிழ் ஆசிரியர்களின் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.
மாநாட்டு ஊர்வலத்தின் கருப்பொருள், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்களுக்கு தங்குமிடம், ஹோட்டல், மாநாட்டு நிகழ்விடங்களை வழிகாட்டவும், ஒருங்கிணைக்கவும், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரம் முதுகலை மாணவர்களை தேர்வு செய்ய உள்ளோம்.
அவர்கள் மூலம், விருந்தினர்களை அன்புடன் உபசரிப்பது, தகவல்களை பரிமாறிக் கொள்வது, தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்வது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நாமக்கல் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் படிப்பிற்கு வழிகாட்டும் விதமாக பாரதியார் பல்கலையில் இலவச பயிற்சி மையம் பிப்ரவரி மாதம் முதல் துவங்கப்படும்.
இதில், முதல் கட்டமாக நுழைவுத் தேர்வு மூலம் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications