பழனியில் இன்று தைப்பூசம் - காவடிகளுடன் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

பழனி: முருகன் தல முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலி்ல இன்று மாலை பிரமாண்ட தேரோட்டம் நடைபெறுகிறது.

முருகன் கோவில்களில் மிகவும் முக்கியமான விழாக்களில் முதன்மையான தைப்பூசத் திருவிழா. குறிப்பாக பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறும்.

பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவார்கள். பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு 7.15 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 5.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது.

பின்னர் மீன லக்னத்தில் தேர் ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று மாலை 4.30 மணிக்கு தைப்பூச திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

தைப்பூசத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் திரண்டுள்ளனர். பழனி நகரமே காவடி மயமாக காட்சி அளிக்கிறது.

நேற்று அதிகாலை 2 மணி முதலே ஒட்டன்சத்திரம்-பழனி நெடுஞ்சாலை வழியாக லட்சக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் பழனி வந்தடைந்தனர்.

கடும் பனியையும் பொருட்படுத்தாமல் இடும்பன்குளம், சண்முக நதியில் நீராடி காவடிகளுடன் சென்று பழனியாண்டவரை தரிசனம் செய்தனர்.

இன்றும் பழனி-ஒட்டன்சத்திரம், பழனி -தாராபுரம் நெடுஞ்சாலை, பழனி-உடுமலை நெடுஞ்சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனி மற்றும் திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் அன்னதான நிகழ்ச்சிகளும், இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடை பெற்று வருகிறது.

பழனி தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி தெப்பத் தேரோட்டம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

தைப்பூசத்தையொட்டி பழனி நகரில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா

தைப்பூச திருவிழாவை ஓட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குவிந்தனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஓன்றான தைப்பூச திருவிழா இன்று நடந்தது.

இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு காலசாந்தி பூஜைக்கு பிறகு ஸ்ரீபெலி நாயகர் உலா நடந்தது. பின்னர் கடலில் அடசர தேவர் தீர்த்தவாரி நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் சாமி அலைவாயுகாத்த பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபதுக்கு வந்தார். மாலை 4 மணிக்கு அங்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை அடைகிறார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்து குவிந்தனர். பின்னர் கடலில் புனித நீராடி, நாழிக்கிணறில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

பல்லாயிரக்கனக்கான பக்தர்களின் வருகையால் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் காவடி எடுத்தும், வேல்களால் அலகு குத்தியும் அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+