நூல் விலை உயர்வைக் கட்டுபடுத்தக் கோரி சங்கரன்கோவில் விசைத்தறி கூடங்கள் மூடல்
சங்கரன்கோவில்: நூல் விலையை கட்டுபடுத்தக்கோரி சங்கரன்கோவிலில் 2 நாட்கள் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறிக்கு பயன்படுத்தக் கூடிய நூல்கட்டு விலை மாதந்தோரும் உயர்ந்து கொண்டே வருகிறது. நூலின் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்படாததால் சங்கரன்கோவில் விசைத்தறி கூட மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன், திருமுருகன் சிறு விசைத்தறியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து விசைத்தறி தொழிற்சங்கத்தினர் நூல் விலையைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 2 நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் அனைத்து விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டன. நேற்றும் சங்கரன்கோவிலில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications