இனிப்பில்லாத தீபாவளியா?

தீபாவளிப் பண்டிகை என்றால் பட்டாசு தான் என்றாலும் இனிப்பில்லாமலா பண்டிகை கொண்டாடுவோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் வகை வகையான இனிப்புகள் செய்வோம், வீட்டில் செய்வது போதாது என்று கடைகளிலும் வாங்குவோம்.
நாளை தீபாவளி என்றால் முதல் நாள் இரவு பெண்கள் தூங்காமல் இனிப்பு வகைகள் செய்வார்கள். அதிரசம், முறுக்கு, அல்வா, லட்டு, ஜிலேபி என்று வகைவகையாய் செய்து அசத்துவார்கள். காலையில் எழுந்தவுடன் குளித்து, புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டுவிட்டு முதலில் இனிப்பைத் தான் உண்பார்கள். அந்த நாளும், ஆண்டும் இனிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை.
வீட்டில் செய்து வைத்த பலகாரங்கள் போக கடையில் இருந்து பால்கோவா, மைசூர்பாக்கு, மிக்சர், பூந்தி, பாதுஷா, ஜாங்கிரி, குலாப்ஜாமூன், பக்கோடா வாங்குவது வழக்கம். அதை நம் வீட்டிற்கும் வைத்துக் கொண்டு உற்றார், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வது நம் பண்பாடு.
தீபாவளி அன்று பெரும்பாலான ஹோட்டல்களில் கூட்டம் நிரம்பி வழியும். காலை சமையலை மட்டும் வீட்டில் முடித்துக் கொண்டு மதிய உணவிற்கு ஏதாவது உணவகத்திற்குச் சென்று பிரியாணி, கோழிக்கறி, மட்டன், நண்டு, எரா, மீன் என்று ஒரு புடிபுடிப்பார்கள். சாப்பிட்டாகிவிட்டது நேராக வீட்டுக்கா போக வேண்டும் என்று அன்று ரிலீஸான படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வார்கள்.
அது மொக்கையோ, நல்ல படமோ பொழுதைக் கழிக்க டிக்கெட் வாங்கி படத்தை பார்த்துவிட்டு வருவார்கள். இப்படியாக அந்த நாளை இனிய நாளாக கழிப்பார்கள்.
தித்திக்கும் இனிப்பும், திளைக்க வைக்கும் சினிமாப் பட லயிப்பும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பிரிக்க முடியாததாகி விட்டது.











Click it and Unblock the Notifications