ஒரு வயதுக் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் சிகிச்சைத் திட்டம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

CM Karunanidhi
சென்னை: தமிழக அரசின், ஒரு வயதுக் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் பச்சிளம் குழந்தை உயிர் காக்கும் சிகிச்சைத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் உடல்நல பாதுகாப்பை, சுகாதாரமான வாழ்வை உறுதிப்படுத்திட வேண்டுமெனும் உணர்வோடு 2006-ம் ஆண்டுக்குப்பின் இந்த அரசு உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம், ஏழைச்சிறார் இருதய பாதுகாப்பு திட்டம், பள்ளிச்சிறார் இருதய பாதுகாப்பு திட்டம், அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம், ஏழை கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம், அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டம் என்பன போல பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் இத்தகைய திட்டங்களுடன் மேலும் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா புதிய தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் அவசர கால சிகிச்சை திட்டம் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை மண்டலம் சார்ந்த பகுதிகளில் கொடையாளர்களிடமிருந்து ரத்த சேகரிப்பு செய்திட, ரூ.1 கோடியே 39 லட்சம் செலவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய ரத்த சேமிப்பு ஊர்தியையும், மூலை முடுக்குகளில் உள்ள ஏழை, எளியவர்களுக்கும் அவசர மருத்துவ உதவிகள் கிடைக்க உதவும் வகையில் இந்த அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் அவசர மருத்துவ ஊர்தி இலவச சேவை திட்டத்தின்கீழ் தற்போது இயங்கிவரும் 385 மருத்துவ ஊர்திகளுடன் ரூ.5 கோடியே 96 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள 31 அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவை விரிவாக்க திட்டத்தையும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்து விடுவோரின் உடலை அவர்களது இருப்பிடத்திற்கு அல்லது மயானத்திற்கு இலவசமாக எடுத்துச்செல்ல உதவும் இலவச அமரர் ஊர்தி சேவைத்திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுவதால் அத்திட்டத்தின் முதல் கட்டமாக 10 இலவச அமரர் ஊர்திகளையும் முதல்வர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிறந்து ஒரு வயது வரையுள்ள குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்துடன் இணைத்து ரூ.15 கோடி செலவிலான பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சை திட்டத்தையும் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான விளக்க அட்டைகளை 10 குழந்தைகளுக்கு வழங்கினார்.

மேலும், 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் ஏறத்தாழ 55 லட்சம் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.5 கோடியே 66 லட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்படும், பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி வைத்து 5 பல் மருத்துவர்களுக்கு இத்திட்டத்திற்கான கருவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரக்குழுக்கள் அமைத்து, 32 லட்சத்து 6 ஆயிரம் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் 10 மாவட்டங்களில் ரூ.6 கோடியே 18 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும், மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து புதிய சுகாதார அட்டையை வழங்கி, திட்டக்கையேடு மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டார்.

ரூ.69 கோடி திட்ட மதிப்பீட்டில் நாமக்கல், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, ராமேசுவரம், திண்டிவனம், வாடிப்பட்டி, தொண்டாமுத்தூர், சூலூர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை மனநல காப்பகம், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்தியமுறை மருத்துவமனை ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள 25 புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேஷன்' சார்பில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அரசு மருத்துவமனை கட்டிடத்தையும் திறந்து வைத்த முதல்வர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின்கீழ், ரூ.48 கோடி செலவில் கோவை, வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகளுக்கு தேவைப்படும் கட்டிடங்களுக்கும், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் செலவில் மருந்தாளுநர் பட்டய பயிற்சி கட்டிடம் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டய பயிற்சி கட்டிடம் ஆகியவற்றுக்கும் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ.400 கோடி செலவில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ரூ.4 கோடியே 86 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள 48 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய தர நிறுவனம் வழங்கியுள்ள தரச்சான்றிதழ்களை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநரிடம் முதல்வர் வழங்கினார்.

2006-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 6 ஆயிரத்து 810 மருத்துவர்கள், 7 ஆயிரத்து 242 செவிலியர்கள், 1,767 கிராம சுகாதார செவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது புதிதாக நியமனம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 606 செவிலியர்களுக்கும், 804 செவிலிய உதவியாளர்களுக்கும், 463 ஆய்வக தொழில்நுட்பனர்களுக்கும், 57 ரேடியோகிராபர்களுக்கும், 70 மகப்பேறு உதவியாளர்களுக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+