கம்பன் கழக மகளிர் அணி இரண்டாம் ஆண்டு விழா
பாரிஸ் புற நகரான கார்ழ் லே கோனேஸ் (Garges-lès- Gonesse) நகரில் மே மாதம் 28 – ம் நாளன்று சனிக்கிழமை பிரான்ஸ் கம்பன் மகளிரணி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அன்னை தெரசா நூற்றாண்டு விழா மற்றும் கம்பன் கழக மகளிர் அணியின் இரண்டாம் ஆண்டு விழா என இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்ட இந்த விழாவினை இந்தியன் வங்கி அதிகாரி திரு. ராஜன் மற்றும் அவரது துணைவியார் உஷா ராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இறைவணக்கம்
திருமதி சுசீலன் இராதிகா தேவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மகளிரணி செயலர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் அனைவரையும் அன்புடன் வரவேற்றார் . மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கத்தையும், செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் பாடி விழாவினை சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து பரதநாட்டியமாடிய செல்வி சாரநாயகி கோபாலகிருஷ்ணன் தனது நளினமான பரத நாட்டியத்தால் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தார் .
அன்னை தெரசாவின் சிறப்பு
விழாவில் "தியாகச்சுடர்" அன்னை தெரசா என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞர்கள் வினோதினி சண்முகநாதன், சரோஜா தேவராஜ், அருணா செல்வம் ஆகியோர் பங்கேற்று கவிதை வாசித்தனர்.
"அமைதியின் ஆலயம் அன்னை தெரேசா" என்னும் தலைப்பில் பேசிய மகளிரணி பொருளாளர் திருமதி லெபோ லூசியா அவர்கள் அன்னை தெரேசாவின் அன்பு, தொண்டு, கருணை , இறைபக்தி பற்றிய செறிவான சிறப்புரையை வழங்கினார்கள்.
மகளிரணியினர் சார்பில் மாதம் தோறும் நடத்தும் கருத்தரங்குகளில் இடம்பெற்ற சிறப்புச் சொற்பொழிவுகள், கவிதைகள், மற்றும் கடந்த ஆண்டு "மகளிர் விழா"வின் சில பகுதிகள் தாங்கிய "மலர்" ஒன்று திருமதி உஷா இராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செல்விகள் பிருந்தா நடராஜா , பானுஜா நடராஜா, அனுஷ்யா தமிழ் வேந்தன் ஆகியோரின் "வீணை இசை" பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சொற்போர் அரங்கம்
முத்தாய்ப்பாகச் "சொற்போர் அரங்கம்" நடைபெற்றது. அதில் குடும்பத்தில் விரிசல் உண்டாகக் காரணம் பலவாக இருப்பினும் ,
'தான் எனும் ஆணவம் ','பொருளாதாரம் ', கடமைகள்', 'சுற்றம்' இவையே பெரும்பாலும் அடித்தளமாக அமைகின்றன என்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
நிறைவாக இடம்பெற்ற "தமிழாக்கப் போட்டி" மகளிரணித் துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் அவர்கள் தயாரிப்பில் நடத்தப்பட்டது .
திருமதி சுகுணா சமரசம் உடன் நடுவராக செயல்பட, விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பத்து மகளிர் கலந்து கொண்டு
பிறமொழி நீக்கித் தமிழ் பேசும் ஆர்வம் இருந்ததால் , தமிழில் சொற்களுக்குப் பஞ்சமில்லை என்று நிரூபித்தனர்.
நன்றியும், பரிசளிப்பும்
மகளிரணியின் செயற்குழு உறுப்பினர் திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்கள் கவிதையாய் நன்றி தெரிவித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
கம்பன் கழகம் பொங்கல் விழாவில் நடத்திய "கோலப்போட்டி", "ஓவியப்போட்டி" களில் வெற்றி பெற்ற பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் மகளிரணி பரிசுகள் வழங்கியதோடு விழா இனிதாக நிறைவு கொண்டது.
தகவல் படங்கள்: தாமரை – பிரான்ஸ்












Click it and Unblock the Notifications