அமீரக வாழ் தமிழர் ஹுசைன் பாஷாவுக்கு 'சிறந்த இந்திய குடிமகன்' விருது

2012ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய குடிமகன் விருதுக்கு அமீரகத்தில் வாழும் தமிழரான ஹுசைன் பாஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்படுகிறது.
ஹுசைன் பாஷா கடந்த 2003ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்களின் மன அழுத்தம் சம்பந்தமான ஆய்வுகளை முனைவர் படிப்பிற்காக மேற்கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளியின் கல்வி அறக்கட்டளையில் மேலாண்மை உறுப்பினராக உள்ளார். இந்திய மனோதத்துவ சங்கத்தில் இணை உறுப்பினராகவும் உள்ளார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சமூக சேவைக்கான பிரிவின்கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படவிருக்கிறது. அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா போன்ற இடங்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குவைத்திலும் ஆளுமைத் திறன், நேர மேலாண்மை பயிற்சி முகாம்களை நடத்தியிருக்கிறார். டான் டி.வி.க்காக இன்போடைம் என்ற பல்சுவை நிகழ்ச்சியை நடத்தி வந்த இவர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை குறித்த ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார். இரத்த தான, மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற சேவைகளை திறம்பட செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பி.சி. பப்லிஷிங் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications