மேரி கோல்வின் என்னும் சமூகப் போராளி... !

Subscribe to Oneindia Tamil

Marie Colvin
மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கப் போராடும் போராளிகள் யுகங்கள் தோறும் அவதரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆள்பவருக்கு எதிராகவோ, ஒடுக்கப்பட்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவோ, எதற்காகவேனும் ஒவ்வொரு யுகத்திலும் போராளிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உலகில் எத்தனையோ பெண் போராளிகள் தோன்றியிருக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசடைவதை எதிர்த்து பசுமை புரட்சி செய்த வங்காரி மாத்தாயும் ஒரு போராளிதான். அதேபோல் ஆணாதிக்க சமுதாயம் நிறைந்த பத்திரிக்கை துறையில் நுழைந்து யுத்தகளத்தில் வீரத்துடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை பதிவு செய்த மேரி கோல்வின் என்ற செய்தியாளரும் ஒரு சமூகப் போராளிதான். கடமைக்காக வாழ்ந்து மடிந்த அந்த பெண் போராளியை சர்வதேச மகளிர் தினத்தை அவரை நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்வோம்.

‘எமக்குத் தொழில் கவிதை’ என்றார் மகாகவி பாரதி. அதேபோல் தன் எழுத்து மூலம் போர்க்கள நிகழ்வுகளை உலகறியச் செய்தவர் மேரி கோல்வின் என்ற யுத்த கள பத்திரிக்கையாளர்.

அமெரிக்காவில் பிறந்தாலும் லண்டனில் குடியேறி கடைசியில் லண்டன்வாசியாகவே மாறிப்போனார். 30 ஆண்டுகள் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து உலகின் எந்த பகுதியில் எல்லாம் வெளிச்சத்துக்கு வராத போர்க் குற்றங்கள் அரங்கேறுகின்றனவோ… அங்கு எல்லாம் துணிச்சலாக சென்று செய்தி சேகரித்தவர் மேரி கோல்வின்.

ரத்த நிலங்களில் காலடிச் சுவடுகள்

கடந்த 25 ஆண்டுகளாக சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் பணியாற்றிய மேரி கோல்வின் தனது பணிக்காலத்தில் கொசோவா, செசன்யா, ஈழம் என உலகின் ரத்த நிலங்களைத் தேடிச் சென்று களப்பணியாற்றிய போராளி.

போர்ச் செய்திகளை உலகம் எப்போதுமே எண்ணிக்கைகளால் அளக்கும். ஊடகங்களும் அப்படித்தான். மேரி கோல்வின் வலிகளால் அளந்தவர். 2001ம் ஆண்டு ஈழத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற போது, இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் மேரி கோல்வினின் ஒரு கண் பறிபோனது. அதோடு அவரது ஊடகப் பணிக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் முன்னைவிடமும் பலமாக, தீவிரமாக உழைக்கத் தொடங்கினார் மேரி கோல்வின் என்கின்றனர் அவருடன் பணி புரிந்தவர்கள்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மே 13 முதல் 17 வரை ஐந்து நாட்கள் விடுதலைப் புலிகளுடன் சர்வதேசம் நடத்திய ரகசிய பேரத்திற்கும். அவர்களுக்கு இழைத்த துரோகத்திற்கும் மவுனச் சாட்டியாக இருந்தவர் மேரி கோல்வின். அதேபோல் சிரியாவில் நடந்து வரும் போராட்டங்களை தன்னுடைய கட்டுரையின் வாயிலாக உலகிற்கு உணர்த்தியவர். 42 ஆண்டுகால பஷர் அல் அசாத் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக சிரிய மக்கள் போராடி வருகின்றனர். அங்கு உள்ளூர் ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சிரியாவிற்குள் நுழைய தடை உள்ளது. இருப்பினும் பல்வேறு தடைகளைத் தாண்டி மேரி கோல்வில் சிரியாவிற்குள் நுழைந்தார். தாக்குதல்கள் தொடர்ந்த போதும் விளக்குகளை அணைத்துவிட்டு இருளிலேயே கார் ஓட்டிச் சென்று யுத்த செய்திகளை சேகரித்தார். அவரது கட்டுரைகள் சிரியா அரசையே அச்சுறுத்தியது. பிப்ரவரி இறுதி வாரத்தில் சிரியாவின் ஹோம்ஸ் நகரில், பாபா அமர் பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது ராணுவம் வீசிய குண்டுகளுக்கு பலியானார். இது அவரை கொல்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறப்படுகிறது.

இறுதி வரை போராட்டம்

படுகொலை அச்சத்தில் வாழ்தல்! ஷெல் குண்டுகளுக்குப் பலியாகும் முன்னர் மேரி கோல்வின் ‘ சண்டே டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு அனுப்பி இருந்த கடைசி செய்திக்கட்டுரையின் தலைப்பு இது! இந்த கட்டுரையில் சிரியர்களின் துயரமும், வலிகளும், உலகின் புறக்கணிப்பும் ஒரு சேர மனதில் அறைகின்றன.

தன்னுடைய இறுதி மூச்சு வரையிலும் தன்னுடைய கடமைக்காகவே வாழ்ந்தவர் மேரி கோல்வின். நம்முடைய காலத்தில் வாழ்ந்து மறைந்த அந்த வீரப் பெண்மணியை சர்வதேச மகளிர் தினத்தில் நினைவு கூர்வதில் பெருமைக் கொள்வோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+