ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்கள் - 17
திருப்பாவை - 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

விளக்கம்:
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் இது. கோபியர்கள் நந்தகோபனின் இருப்பிடம் சென்று அவரை எழுப்பி, அடுத்துப் படுத்திருந்த யசோதையையும் எழுப்பி, ஆர்வத்தினால் கண்ணனை எழுப்பி அவன் குறிப்பால் பலராமனையும் எழுப்பும் அழகான பாசுரம் இதுவாகும். ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக. வாமன அவதாரத்தின் போது மூன்று அடி நிலத்தை மாபலியிடம் தானமாகப் பெற்று, பின்னர் வானளவு உயர்ந்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை ஒரு அடியாகவும் அளந்த தேவர்களின் தலைவனான கண்ணனே, உறக்கத்தை விடுத்து எழ வேண்டும். சிவந்த பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடைய பலராமனே எழ வேண்டும்.நீயும் உன் தம்பியுமான கண்ணனும் எழுந்து எங்களுக்கு சேவை தரவேண்டும் என்று எழுப்புகின்றனர்.
திருவெம்பாவை - 17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!
விளக்கம்:
நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர். நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!












Click it and Unblock the Notifications