ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களை பாராட்டி அமெரிக்காவில் நர்த்தகி நடராஜன் சிறப்பு நடனம்.!
டல்லாஸ்(யு.எஸ்) பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜன், ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு புத்தம் புதிதாக சிறப்பு நடனம் ஒன்றை அர்ப்பணித்தார்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் நர்த்தகி நடராஜன் பங்கேற்றார்.அவரை பார்வையாளர்களுக்கு கால்டுவெல் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நடனம் பயின்ற நாள் முதல், முதன் முறையாக பக்கஇசைக் கலைஞர்கள் இல்லாமல், முன்னதாக பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு நடனமாடியதாக தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்காக நடனம்
பாரதியார், பாரதிதாசன் பாடல்களுடன் திருக்குறள்களை இணைத்து உருவாக்கி பாடலுக்கும் நடனமாடினார். சின்னஞ்சிறு கிளியே பாடலில் கண்ணனை தூங்க வைப்பதற்காக அவருடைய அபிநயங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தி விட்டது.
அரங்கத்தில் எழுந்த கைத்தட்டல்கள் கண்ணனின் தூக்கத்தைக் கலைத்து விடும் என்று அவர் காட்டிய அபி நயத்தைத் தொடர்ந்து இன்னும் பலத்த கரவொலிகள் எழுந்தன.

ஒவ்வொரு பாடலுக்கு முன்னதாகவும் அது குறித்து சிறு உரையாற்றினார். திருக்குறள் பாடலுக்கு முன்னதாக அதை ஐரோப்பிய மாணவர்களுக்கு கற்றுத் தந்ததைப் பற்றி கூறினார்.
மகாத்மா காந்தி விரும்பிய திருக்குறளை பாடல் மூலம் கற்றுக்கொண்டது பெரும் பாக்கியம் என்று மாணவர்கள் தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.
தமிழகத்திலும் உலகமெங்கிலும் உள்ள இளைஞர்கள் பாரம்பரியக் கலையான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது பெருமைக்குரியதாகும் என்று கூறி, அவர்களை பாராட்டும் வகையில் முதன் முதலாக சிறப்பு நடனம் ஆடினார்.
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதி திருச்சி லோகநாதன் பாடிய 'இளந்தமிழா' என்ற அந்தப் பாடல் அநீதியை எதிர்த்துப் போராட இளைஞர்களை அழைப்பதாக இருந்தது

தமிழ் இசையிலிருந்து தான் கர்நாடக இசை!
வைத்தியலிங்கம் - கோடிலிங்கம் சகோதரர்களின் தமிழிசை சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. தமிழிசைப் பற்றிய வரலாற்றையும் மற்ற விவரங்களையும் வைத்தியலிங்கம் எடுத்துக் கூற, தொடர்ந்து அதற்கான தமிழிசைப் பாடல்களை கோடிலிங்கம் பாடினார்.
தொல்காப்பியத்திலேயே தமிழ் இசைக்கான கூறுகள் வகுக்கப்பட்டுள்ளன என்ற அரிய தகவலைக் கூறினார். கர்நாடக சங்கீதத்தின் ராகங்கள் தமிழிசை ராகத்திலிருந்து வந்தவை என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.
சிலப்பதிகாரம், நெடுநல்வாடை, குறுந்தொகைப் பாடல்களை குறிப்பிட்டு அதில் அமைந்துள்ள ராகங்கள் பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அந்த பாடல்களை, இசையுடன் பாடவும் செய்தார்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை அறிமுகப்படுத்தும் 'மாசறு பொண்ணே மணியே முத்தே' பாடலை தமிழ் ராகத்தில் கோடிலிங்கம் பாடிய போது அரங்கமே பரவசமானது. தமிழ் இசையில் இத்தனை சிறப்பா என்று பார்வையாளர்கள் வியப்பில் உறைந்து விட்டனர்
.
ஆசாரக்கோவை பாடலைப் பற்றி கூறும் போது 'தமிழ்' என்பதற்கு ஆராய்ச்சி என்ற அர்த்தமும் இருக்கிறது என்றார்.
அந்தப் பாடலில் தமிழ்ப் படித்ததால் இளைத்துப் போய்விட்டேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆராய்ச்சி செய்ததால் இளைத்துப் போய்விட்டேன் என்பதாகும்.

சிவனுடன் போட்டி நடனம்
விழாவின் தொடக்கமாக டல்லாஸில் 'நளதமயந்தி' நாட்டிய நாடகத்தில் நடித்து நடனமாடிய பிரசன்னாவின் சிறப்பு நடனம் இடம் பெற்றிருந்தது. பாரம்பரிய நடனத்துடன் தொடங்கி அவர் அடுத்து ஃப்யூசன் நடனம் ஆடினார்.
அதில் சிவனுடன் போட்டி போடுவது போல் இரு வெவ்வேறு பாத்திரங்களாக மாறி மாறி நடனமாடினார். இறுதியாக சிவன் வெற்றி பெறுவது போலவும், பக்தன் மன்னிப்பு கேட்பது போலவும் சடசடவென்று இடம் மாறி ஆடியது சிறப்பாக இருந்தது.

விழாவுக்கு வந்திருந்தவர்களை கிருஷ்ணராஜ் வரவேற்றார்.. புரவலர் பால்பாண்டியன் நினைவுப் பரிசுகள் வழங்கினார். டெனி மற்றும் கோமதி தொகுத்து வழங்கினார்கள். சங்கத்தலைவர் கால்டுவெல் நன்றி தெரிவித்தார்.
இர.தினகர்
படங்கள் : செண்பகராமன்












Click it and Unblock the Notifications