திருப்பாவை பாடல் - 23

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பொருள்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 3
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளியொளி யுதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
பொழுது புலர்வதை உணர்த்த குயில் கூவுகிறது. கோழிகளும் கூவின. மற்ற பறவை இனங்களும் ஒலித்துவிட்டன. வெண்சங்குகளும் முழங்கின. நட்சத்திரங்களின் ஒளி நீங்கும்படி சூரியன் ஒளிவீசத் தொடங்குகிறான். பெரு வெளிச்சம் பெருகிப் பரவுகிறது. தர்மத்தின் தலைவனைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் பக்தர்கள். சிவனது கணுக்காலைக் குழந்தை போல் கட்டிக் கிடக்கிறது வீரக்கழல்கள். அத்திருவடிகளைக் காணுகின்ற புண்ணியத்தை எமக்குத் தருவாயா? பெண்ணியப் பெருந்தலைவா? யாவரும் அறிந்துகொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே! திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவனே! தேவர்க்கு நற்கதியை அளிக்கும் உனது திருவடிகளை எமக்குக் காட்டும்படி நீ உறக்கத்தைவிட்டு நீங்கி எழுந்தருள்வாய்.
திருப்பாவை - பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
திருப்பள்ளி எழுச்சி - பாடல் 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்
இன்னிசைக் கலைஞர்கள் யாழோடும், வீணையோடும் சிவனைப் பாடுகிறார்கள். தோத்திரங்கள், வேதங்கள், மந்திரங்கள் போன்றவற்றை ஓதி பலர் உயர்கிறார்கள். பறிக்கும் போதும் சிரிக்கும் பூக்களை மாலை, பிணையல், கண்ணி, தொடையல் என்று வகை வகையாய் தொடுக்கும் போதும், சிவ சிந்தனையுடனேயே இருக்கிறார்கள் பக்தர்கள். தம் வாழ்வின் பழுது நீங்கச் சிவனைத் தொழுது நிற்போம். எந்நாளும் எம் உயர்வு உன் கருணை. எங்கள் உடம்பு வருத்திச் செய்கிற முயற்சிக்குக் கிடைக்கும் கூலி கூடுதலாய், குறைவாய்த் தெரிவதும் உன்னால்தான் என்று நெகிழ்ந்து அழுவோர். கோயிலில் உருண்டு புரண்டு அங்கப் பிரதட்சணம் செய்வோர். "நீயே அடைக்கலம்' என்று தலைக்கு மேலே கை கூப்பி நிற்போர். இவ்வாறு யாவர்க்கும் அருள் புரிபவன் அவன். திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! எங்களையும் ஆட்கொண்டு பேரருள் புரிய விரைவில் துயிலெழுவாய்.
திருப்பாவை - பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
திருப்பள்ளி எழுச்சி - பாடல் 5
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து
ஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்
சிவபெருமானே பஞ்ச பூதங்களிலும் நீ நிறைந்திருக்கிறாய். உனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று புலவர்கள் பாடும் புகழ் கீதத்தையே நாங்கள் கேட்டறிந்தோம். எங்கும், எதிலும், எப்போதும் நீ இருந்து கொண்டுதானிருக்கிறாய் என்றெல்லாம் உன்னைப் பற்றிப் பாடுகிறார்கள். ஆனந்தத்தில் ஆடுகிறார்கள். உன்னைக் கண்டறிந்தவரை நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்ட மன்னவனே! யாருடைய சிந்தனைக்கும் எட்டாதவனே! எங்கள் முன்னே தோன்றி, எங்கள் குற்றங்களைக் களைந்து, எங்களை ஆட்கொண்டு அருளும் பெருமானே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications