மகிழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள் .. மதிய உணவு திட்டத்தில் புதிய மாற்றம்! உ.பி அரசு அசத்தல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான உணவை விநியோகிக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதேபோல இந்த உணவு பட்டியலிலும் சில மாற்றங்களை அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சூடான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவு திட்டத்தை சீராகச் செயல்படுத்த அனைத்து மையங்களிலும் ஒரே மாதிரியான உணவை விநியோகிக்க உ.பி அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவையே அங்கன்வாடிகளிலும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான பணிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள சுமார் 65 சதவீத அங்கன்வாடி மையங்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளாகத்தில் அமைந்துள்ளன என்று முன்மொழிவு தெரிவிக்கிறது. எனவே தொடக்கப்பள்ளிகளில் விநியோகிக்கப்படும் உணவு அட்டவணையையே பின்பற்ற உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. இது மதிய உணவு விநியோகத்தை சீராக வைத்திருக்கும் என்றும் மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications