ரஷ்யாவில் சீன அதிபர்.. அமெரிக்காவுக்கு ஸ்ட்ராங் மெசேஜ்! உற்று நோக்கும் இந்தியா
மாஸ்கோ: ஹிட்லர் படைகளை தோற்கடித்ததன் 80ம் ஆண்டு நினைவு தின கொண்டாட்டம் நேற்று ரஷ்யாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றிருந்தார். இது அமெரிக்காவுக்கு வலுவான மெசேஜை அனுப்பியிருக்கிறது. இந்த சந்திப்பை இந்தியா உற்று நோக்கி வருகிறது.
இந்தியாவை போலவே அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் இந்த சந்திப்பை கவனித்துள்ளன. இந்தியாவுக்கு இரண்டு விஷயங்களால் இந்த சந்திப்பு முக்கியமானதாக இருக்கிறது.

1. பிரிக்ஸ் கரன்சி
2. பிரிக்ஸ் பேமென்ட் சிஸ்டம்
சர்வதேச அளவில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் அமைப்பு புதிய கரன்சியை உருவாக்க தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிக பலன் அடையப்போவதும் இந்தியாதான். பிரிக்ஸ் கரன்சி இல்லையென்றாலும் கூட, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பொதுவான ஒரு பரிவர்த்தனை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
இது மேற்கு நாடுகள் உருவாக்கியுள்ள ஸ்விப்ட் பரிவர்த்தனை அமைப்பை விட எளிமையாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். இதுவும் இந்தியாவுக்கு நல்ல பலனை கொடுக்கும். ஆக இது பற்றி இந்த சந்திப்பில் புதினும், ஜி ஜின்பிங்கும் பேசியிருப்பார்கள். எனவேதான் ரஷ்யா-சீனா அதிபர்களின் சந்திப்பை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
மறுபுறம் சர்வதேச அளவில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்று இன்று வரை இருக்கிறது. இதை சீனாவும், ரஷ்யாவும் சேர்ந்து மாற்ற முயன்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் சில நாடுகளுடன் நேரடியான மோதல்கள் தவிர்க்க முடியாதது. அப்படித்தான் உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்தது.
போரை காரணம் காட்டி ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யாவை தனிமைப்படுத்த ஐரோப்பாவும், பின்னாலிருந்து அமெரிக்காவும் வேலை பார்த்து வருகிறது. இந்நிலையில்தான் மாஸ்கோவுக்கு சீன அதிபர் சென்றிருந்தார். இது ரஷ்யா தனியாக இல்லை என்பதை உலகத்திற்கு தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
ராணுவ ரீதியாக மிகவும் சவால்மிக்க நாடாக ரஷ்யா இருக்கிறது என்றால், பொருளாதாரத்தில் சீனாவை அடித்துக்கொள்ள முடியாது. இரண்டு நாடுகளும் சேர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகின்றன. நேற்று நடந்த மாஸ்கோ நிகழ்வில் கியூபா, வெனிசுவேலா, மங்கோலியா, ஐரோப்பாவிலிருந்து செர்பியா மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பில் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக விவாதங்கள் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரொம்ப கம்மி. சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் மொத்த உற்பத்தியை விட கொஞ்சம் அதிகம் என்கிற அளவில்தான் ரஷ்யாவின் மொத்த உற்பத்தி அளவே இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் தொழிற்துறை போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களில் சீனா முதலீடு செய்து வரும் நிலையில், பாதுகாப்பு தொழிற்துறை மற்றும் இயற்கை வளங்களில் மட்டுமே ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இந்த நிலையை மாற்ற சீனா சில தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த சந்திப்பின்போது நடந்திருக்கலாம். ஆக இவை எல்லாவற்றையும் இந்தியா உற்று நோக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications