AI ஊழியர்களுக்கு ஆப்பு.. 600 பேரை பணி நீக்கும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனம் ‛மெட்டா'.. ஷாக் தகவல்
வாஷிங்டன்: வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தாய் நிறுவனமான ‛மெட்டா'வில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வருங்காலம் ஏஐ தான் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகமான ஊழியர்கள் அந்த பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்போது அவர்களை வேலையில் இருந்து அனுப்பப்பபட உள்ளனர்.
தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் கால்பதித்துள்ளது. ஏஐ-யை பயன்படுத்தி விரைவாகவும், துல்லியமாகவும் பணிகளை செய்ய முடிகிறது என்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக பிரபல ஐடி நிறுவனங்கள் ஏஐ-வை காரணம் காட்டி பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அக்சென்ச்சர், டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அமேசான் உள்பட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டை அதிகரித்து ஊழியர்களை குறைத்து வருகின்றன. இதனால் ஐடி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
இப்படியான சூழலில் மெட்டா நிறுவனத்தில் ஏஐ பிரிவில் பணியாற்றும் 600 ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்டா என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசன்சர், திரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மெட்டாவும் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் தான் ஏஐ வருகையால் மெட்டா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏஐ பிரிவில் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியது. இதற்காக பல மில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டது. இதற்கிடையே தான் தற்போது மெட்டாவின் ஏஐ பிரிவில் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மெட்டாவின் தலைமை AI அதிகாரி அலெக்சாண்டர் வாங்கின் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், மெட்டாவின் ஏஐ உள்கட்டமைப்பு, அடிப்படையான செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் பிற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெட்டாவின் ஏஐ பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் நினைத்த நிலையில் தற்போது பணி நீக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இருப்பினும் தற்போது மெட்டாவின் இந்த முடிவுக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ‛‛ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களின் வேலையை பறித்து வருகிறது. இதனை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏஐ பிரிவிலேயே பணியாற்றும் வல்லுநர்களுக்கு கூட பணி பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது'' என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications