அடிதடி வழக்கு.. சமாதானத்திற்கு வந்த அமைச்சர் மரிய வில்சன்! சமரச மையத்தில் ஆஜர்!
சென்னை: அமைச்சர் மரிய வில்சன், சொத்து பிரச்சனையில் அவரது சகோதரரை தாக்கியதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் சமரச மையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து, தற்போது அமைச்சர் ஆஜராகியிருக்கிறார்.
அமைச்சர் மரிய வில்சனுக்கு இந்த வழக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. இப்படி இருக்கையில், தற்போது அவர் சமரச மையத்தில் ஆஜராகியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

வழக்கின் பின்னணி
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியன்று புதுச்சேரி எழில் நகரில் அந்த சம்பவம் நடந்தது. அதாவது, மரிய வில்சனுக்கும் அவரது சகோதரர் மரிய கிளோத் என்பவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து ஆக.8ம் தேதி அவரது சகோதரர் வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்து, மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியதாக மரிய வில்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
நீதிமன்ற தலையீடு
மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது கேஸ் பதியப்பட்டது. ஆனால், எல்லா வழக்குகளும் எளிதில் ஜாமீன் கிடைக்கும் வழக்குகள் என்றும், எனவே கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வீடியோ ஆதாரத்துடன் மரிய கிளோத் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. காவல்துறையும் இதை ஃபாலோ செய்து வழக்கை ஸ்ட்ராங்காக போட.. மரிய வில்சனுக்கு நெருக்கடி அதிகரித்தது.
ஆஜராகாமல் தவிர்த்த மரிய வில்சன்
இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் ஆரம்பத்தில் விசாரணையில் இருந்தது. ஆனால், மரிய வில்சன் அமைச்சராகிவிட்டார். எனவே வழக்கு விசாரணை, புதுச்சேரி முதலாவது அமர்வு நீமன்றத்திற்கு மாறியது. வழக்கு விசாரணையின் போது மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை கூறியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இப்படி இருக்கையில் வழக்காணையை நேரில் வந்து கட்டாயம் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட.. அப்போது கூட அவர் நேரில் ஆஜராகாமல், தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தது. இது மரிய வில்சனுக்கும், தவெக அரசுக்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
எனவே மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமரச மையத்திற்கு வழக்கை மாற்றியது. இதில் மரிய வில்சன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மரிய வில்சன் இன்று சமரச மையத்தின் முன்பு ஆஜராகியிருந்தார். அடுத்தக்கட்ட சமரச பேச்சுவார்த்தை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications