மனிதர்களை தற்கொலைக்கு தூண்டும் AI.. சாட்ஜிபிடி மீது குவியும் வழக்குகள்.. எந்தளவுக்கு ஆபத்தானது?
சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகின்றன. அதேநேரம் ஏஐ காரணமாகச் சில சிக்கல்களும் ஏற்படவே செய்கிறது. இதற்கிடையே ஏஐ டூல்கள் மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாகவும் சொல்லி சாட்ஜிபிடி நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் குவிந்துள்ளன.
இந்தக் காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ பல சாதனைகளைப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு இப்படி பல்வேறு வகைகளிலும் ஏஐ உதவியே வருகிறது. அதேநேரம் ஏஐ செயலிகளால் பல்வேறு சிக்கல்களும் கூட ஏற்படுகிறதாம்.

ஏழு வழக்குகள்
குறிப்பாக ஏஐ டூல்கள் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தற்கொலை குறித்துப் பேசும்போது, அதைத் தடுக்காமல் ஆமோதிக்கும் வகையில் பேசுவதாகப் புகார்கள் எழுந்தன. இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே யூசர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சாட்ஜிபிடி பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறி, அதை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாம். மொத்தம் ஏழு பேர் தனித்தனியாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.
மரணம்
இந்த ஏழு வழக்குகளில் நான்கு வழக்குகள் மரணம் தொடர்பானது. இவை கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. ஏஐ தங்களுக்கு மனநலப் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லி மற்ற மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட யூசர்களுக்காக சாட்ஜிபிடி சமீபத்தில் தான் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்திருந்த நிலையில், இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றங்களில் இந்த ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாட்ஜிபிடி ஏகப்பட்ட பிரச்சனைகளும் பிழைகளும் கொண்டது என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் ஜார்ஜியாவைச் சேர்ந்த 17 வயதான அமோரி லேசி என்பவர் தற்கொலை எண்ணங்கள் குறித்து சாட்ஜிபிடியுடன் ஒரு மாதம் பேசியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை
மற்றொரு வழக்கில், புளோரிடாவைச் சேர்ந்த 26 வயதான ஜோஷ்வா என்னெக்கிங்கின் தாய், சாட்ஜிபிடியிடம் தனது தற்கொலை எண்ணங்களை எப்படி மறைப்பது எனக் கேட்டதற்கு உதவியுள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த 23 வயதான ஜேன் ஷாம்ப்லின் குடும்பமும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. ஜூலை மாதம் தற்கொலை செய்யும் எண்ணம் வந்தபோது, சாட்பாட் அதை ஆதரிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது. இருவருமே பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நான்காவது வழக்கை ஓரிகனைச் சேர்ந்த 48 வயதான ஜோ செக்காண்டியின் மனைவி தாக்கல் செய்துள்ளார். ChatGPTக்கு உயிர் இருப்பதாக அவர் நம்பியிருக்கிறார். இதனால் மனநலக் கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், ஜோ செக்காண்டி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.
மனநலப் பிரச்சினை
அதேபோல சாட்ஜிபிடி தங்களுக்கு மனநலக் கோளாறுகளை ஏற்படுத்தியதாகவும் சொல்லி மூன்று பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 32 வயதான ஹன்னான் மேடன் மற்றும் 30 வயதான ஜேக்கப் இர்வின் இருவரும் மனநலச் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த 48 வயதான ஆலன் ப்ரூக்ஸ், டெல்யூஷனால் (delusions) பாதிக்கப்பட்டதாகவும் இதனால் தனது வேலைக்கும் சிக்கல் ஏற்பட்டதாகச் சொல்லி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சாட்ஜிபிடி விளக்கம்
இந்தச் சம்பவங்கள் நிஜமாகவே மனதை உலுக்கும் வகையில் இருப்பதாக ஓபன்ஏஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "மன உளைச்சல் அல்லது கோபத்தில் யாராவது பேசுவது போலத் தெரிந்தால் அந்த அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கேற்பப் பதில் அளிக்கவும், மருத்துவர் ஆலோசனை கேட்கச் சொல்லும்படி தான் எங்கள் சாட்ஜிபிடியை உருவாக்குகிறோம். மனநல நிபுணர்களுடன் இணைந்து இன்னும் சாட்ஜிபிடியை மேம்படுத்தி வருகிறோம். விசாரணைக்கு நாங்கள் தேவையான ஒத்துழைப்பைத் தருவோம்" என்றார்.
உடல் அல்லது மனநலச் சிக்கல்கள் ஏற்படும்போது நிச்சயம் ஏஐ டூல்களிடம் ஆலோசனை கேட்கக் கூடாது. உடனடியாக அருகே உள்ள மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications