பாக்யராஜ் இறப்பதற்கு முன்பு கேட்ட கடைசி ஆசை.. நிறைவேற்றிய வைரமுத்து.. உருக வைத்த பதிவு
சென்னை: தமிழ் சினிமா இன்னும் கே. பாக்யராஜின் இழப்பில் இருந்து மீளவில்லை. அவரைப் பற்றி தினமும் யாராவது ஒரு பிரபலம் மனம் திறந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது கவிஞர் வைரமுத்து பகிர்ந்திருக்கும் ஒரு சம்பவம், பாக்யராஜின் குடும்பத்தையும் ரசிகர்களையும் மீண்டும் கண்கலங்க வைத்திருக்கிறது.
பாக்யராஜ் கடைசி ஆசை
பாக்யராஜ் உயிரிழப்பதற்கு வெறும் பத்து நாட்களுக்கு முன்புதான் தனது வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்த "படிச்சாப் புடிச்சிர்லாம்" என்ற சுயசரிதை நூலை வைரமுத்துவிடம் அனுப்பியிருந்தாராம். அதோடு, "இதற்கு நீங்கள் முன்னுரை எழுதிக் கொடுக்க வேண்டும்" என்று அன்போடு கேட்டிருக்கிறார்.
அப்போது வேறு வேலைகளில் இருந்த வைரமுத்து, "கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" என்று சொல்ல, அதற்கு பாக்யராஜும் வழக்கமான புன்னகையோடு "சரி" என்று சம்மதித்திருக்கிறார்.
ஆனால் அந்த "சரி" என்ற வார்த்தையே இருவருக்கும் கடைசி உரையாடலாகி விடும் என்று யாரும் நினைக்கவில்லை. ஜூன் 27-ம் தேதி பாக்யராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த செய்தி வந்ததும், வைரமுத்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
அதன்பிறகுதான் அந்த சுயசரிதை புத்தகத்தை முழுமையாக படித்திருக்கிறார். படிக்க படிக்க, பாக்யராஜ் வாழ்க்கையில் சந்தித்த வறுமை, அவமானம், தோல்வி, போராட்டம், மனக்காயங்கள் என ஒவ்வொரு பக்கமும் அவரை உலுக்கியதாக சொல்லியிருக்கிறார்.
வைரமுத்து எழுதிய முன்னுரை
பாக்யராஜ் இறந்த வருத்தத்திலேயே அவர் முன்னுரையை எழுதி முடித்திருக்கிறார். பொதுவாக இருந்திருந்தால் மெயிலில் அனுப்பி வைத்திருப்பேன். ஆனால் இது அப்படி செய்யக்கூடிய விஷயம் இல்லை. நேரில் கொடுப்பதுதான் அவருக்கு நான் செய்யும் மரியாதை என்று நினைத்தேன் என்று வைரமுத்து தனது பதிவில் உருக்கமாக கூறியிருக்கிறார்.

அதன்படியே நேற்று மாலை பாக்யராஜ் இல்லத்துக்குச் சென்ற வைரமுத்து, அந்த முன்னுரையை பூர்ணிமா பாக்யராஜிடம் நேரில் ஒப்படைத்துள்ளார். அருகில் மகன் சாந்தனுவும் இருந்திருக்கிறார். "இந்த புத்தகத்தை யார் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள். இது உயிர்த்துடிப்புள்ள புத்தகம்" என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாக்யராஜ் குடும்பத்தை சந்தித்த வைரமுத்து
பாக்யராஜ் மறைந்த நாளிலிருந்தே அவரது குடும்பம் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறது. இறுதி அஞ்சலியின் போது பூர்ணிமா கண்ணீரில் உடைந்து போனதும், சாந்தனு தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கதறியதும், திரையுலகமே சோகத்தில் மூழ்கியதும் இன்னும் ரசிகர்கள் மனதில் வருத்தமாக இருக்கிறது.

அதேபோல், பார்த்திபன், ராதிகா, குஷ்பு, சுந்தர் சி, லெஜண்ட் சரவணன், நட்டி நடராஜன், ஊர்வசி என பலரும் தொடர்ந்து பாக்யராஜுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் ஒரே வருத்தம் மட்டுமே இருக்கிறது. "இவ்வளவு சீக்கிரம் அவர் போய்விடுவார் என்று யாருமே நினைக்கவில்லை."என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.

ரசிகர்கள் வருத்தம்
இப்போது வைரமுத்து பகிர்ந்திருக்கும் இந்த சம்பவம் அந்த வேதனையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. "முன்னுரை எழுதிக் கொடுங்கள்" என்று பத்து நாட்களுக்கு முன்பு கேட்ட நண்பருக்கு, அந்த முன்னுரையை கையில் கொடுக்க முடியாமல், அவரது மனைவியிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வந்திருப்பது பலரையும் எமோஷனல் ஆக்கி வைத்திருக்கிறது.
இதனால், "ஒரு புத்தகத்துக்காக எழுதப்பட்ட முன்னுரை, இன்று ஒரு நண்பனுக்கான இறுதி அஞ்சலியாக மாறிவிட்டது" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
17.06.2026 அன்று
— வைரமுத்து (@Vairamuthu) July 6, 2026
‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற
தன் சுயசரிதை நூலை
எனக்குத் தந்தனுப்பி
'முன்னுரை எழுதிக்கொடுங்கள்'
என்று பாசத்தோடு கேட்டார்
பாக்யராஜ்
‘கொஞ்சம் அவகாசம்
கொடுங்கள்’ என்றேன்
‘சரி’ என்றார்
27.06.2026 அன்று
அவர் மறைவுற்றார் என்றசெய்தி
என்னை நிலைகுலைய வைத்தது… pic.twitter.com/vaZSHBMsbh














Click it and Unblock the Notifications