ஜூன் ராசி பலன்: ரிஷப ராசிக்கு பணம், குடும்பம் சூப்பர்.. ஒரு விஷயத்துல மட்டும் கவனம்
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோசம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் மிகுந்த நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். சுய நலம் நிறைந்த உலகில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் வாழும் சிலரில் ரிஷப ராசிக்காரர்கள் முக்கியமானவர்கள். உடன் பிறந்தோரின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
கல்வி
இந்த ஜூன் மாதத்தில் சூரிய பகவான் உங்கள் ராசியில் உள்ளார். இதனால் முதல் 15 நாட்களுக்கு கல்வி மிகச்சிறப்பாக இருக்கும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்யோகம், தொழிலில் புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்தபடியான வேலை கிடைக்கும்.
உத்யோகம்
உத்யோகத்தில் உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். குழந்தைகள் வளர்ப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகள் கிடைக்கும். உத்யோகம், தொழில், வீடு போன்றவற்றில் இட மாற்றங்கள் நிகழும்.
பணம்
தன ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த நிதி நெருக்கடி படிப்படியாக விலகும். கடன் சுமை குறையும். இரண்டாம் இடத்தில் புதன் பகவான் இருப்பதால் தொழில் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரின் வருமானமும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பம்
வாழ்க்கை துணையுடன் அவ்வபோது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்யோன்யம் அதிகமாக இருக்கும். குழந்தைகள் உறவு பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு உத்யோகம், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
கவனம்
உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். எனவே எதிர்பாலின உறவில் கண்ணியமாக இருக்க வேண்டும். ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் உத்யோகத்தில் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிர்த்து அனுசரித்து பொறுமையாக செல்ல வேண்டும்.
பரிகாரம்
உத்யோகத்தில் அவசரப்பட்டு திடீரென்று முடிவுகள் எடுக்க வேண்டாம். மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கொள்ளும் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். விரயாதிபதி செவ்வாய் மூன்றாவது இடத்தில் இருப்பதால் சில பிரச்னைகள் உருவாகலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications