கூடலூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா - விதை நெல் மணிகளை சுவாமிக்கு படைத்த விவசாயிகள்
சித்ரா பவுர்ணமி அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பால்குடம், தயிர் குடம் எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
தேனி: கூடலூரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த விழாவின் முத்தாய்ப்பாக சுவாமிக்கு விவசாயிகள் விதை நெல் மணிகளை படைத்து வழிபடும் வைபவமும் நடைபெற்றது.
தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவில், முதல் நிகழ்வாக சக்கரத்தாழ்வார் வீதி உலா மற்றும் கோட்டை கருப்பு சாமிக்கு பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

விதை நெல்மணிகள்
சித்ரா பவுர்ணமி அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பால்குடம், தயிர் குடம் எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இந்தத் திருவிழாவின் போது கூடல் அழகிய பெருமாளுக்கு 'விதை நெல் மணி'களை ஒரு கூடையில் வைத்து கொடுக்கும் "விதைப்பு கூடை" தரும் வைபவமும் நடைபெற்றது. இவ்வாறு சுவாமிக்கு நெல்மணிகளை கொடுப்பதால், விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கூடலூர்
கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூடலூர் விவசாயம் நிறைந்த பூமி இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவே உள்ளனர். விவசாயம் தான் இந்த பகுதிக்கு வாழ்வாதாரமாக உள்ளது எனவே இந்தப் பழக்கம் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. தொடக்க காலங்களில் விவசாயிகள் தங்களிடம் விதைநெல் இல்லாத பட்சத்தில் கோயிலில் இருந்து விதை நெல் மணிகளை வாங்கிச் சென்று தங்கள் நிலத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் இந்த சடங்கு நடைபெறுகிறது.

சுவாமி வீதியுலா
சனிக்கிழமை இரவில் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் கிளம்பிய உற்சவர் சுந்தரராஜ பெருமாள், ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள் சப்பரத்தை வடம்பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து சமுதாய மக்களின் மண்டகப்படிகளில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள், ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலை வந்தடைந்தார். அண்ணல் பேயத்தேவர் வாரிசுகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கூடலூர் பெருமாள் சிறப்பு
108 திருப்பதிகளில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் போலவே, கட்டுமானத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில் இது. சுவாமியும் மதுரையைப் போலவே 'கூடலழகர்' என்ற பெயரிலேயே அழைக்கப் படுகிறார். ஊரும் 'கூடலூர்' என்று அழைக்கப்படுகிறது. மதுரைக்கு 'கூடல்நகர்' என்றொரு பெயரும் உண்டு. மதுரையை ஒத்திருக்கும் இந்த கூடலூரில் உள்ள இக்கோயில் விமானமும் 'அஷ்டாங்க விமான' அமைப்பிலேயே உள்ளது தனி சிறப்பாகும்.












Click it and Unblock the Notifications