தீபாவளி : யம தீபம் ஏற்றினால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் - திருமணத் தடை நீக்கும்
தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பட்டாடு வெடிப்பார்கள், மத்தாப்பு கொளுத்துவார்கள். சொன்னாலும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சிகாகவாவது நாம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் எமதீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள
சென்னை: தீபாவளிப்பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு, பலகாரம் என்று கொண்டாட்டங்கள் இருந்தாலும் முன்னோர்களை நினைத்து வணங்கும் நாளாகவும் தீபாவளி போற்றப்படுகிறது. நவம்பர் 2ஆம் தேதி எமதீபம் ஏற்றுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும் சொத்துகள் சேரும்.
தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
தீபாவளி பண்டிகைக்கு அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூலோகம் வந்திருந்த நம்முடைய பித்ருக்கள் நாம் காட்டும் மத்தாப்பு வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். மது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.

பித்ரு கடன்
அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவேதான் முதலில் பிதுர் தோஷத்தினையும் சாபத்தினையும் போக்க வேண்டும்.

ஐபசி அமாவாசை
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது ஐதீகம். எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

நரக சதுர்த்தசி வழிபாடு
தீபாவளிக்கு ஏன் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று "ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. "துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ: உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்" என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா" எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. இதில் வரும் 'பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி நாளில் மத்தாப்பு கொளுத்த வேண்டும்.
பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள்.

உல்கா தானம்
தர்சம் என்ற வார்த்தை அமாவாசையைக் குறிக்கும். திரயோதசி, நரக சதுர்த்தசி நாட்களில் வெளிச்சம் தரும் வகையில்நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? பித்ரூணாம் என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. உல்கா என்பது நெருப்புடன் கூடிய கட்டை தற்காலத்தில் அது மத்தாப்பு மேலும் மூன்று நாட்களும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை, 'நீராஜிதோமஹாலக்ஷ்மீ மர்ச்சயன்ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதிஸ்ம்ருதா' என்ற வரிகள் தெளிவாக்குகின்றன. இந்த வருடத்தில் இருந்து, பட்டாசு விட விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி வெடிக்க வேண்டும். நம் முன்னோருக்காக திரயோதசி நாளில் பிரதோஷ காலத்தில் யம தீபம் ஏற்றி உல்காதானம் செய்வோம்.

எம தீபம் ஏற்றுவோம்
தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications