மகரம் ராசியில் நீசபங்க ராஜயோகம் அடையும் குரு- எந்த ராசிக்கு லாபம் தெரியுமா
குரு பகவான் தனுசு ராசியில் இருந்து இருந்து அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். பின்னர் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார்.
சென்னை: நவகிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள். தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குருபகவான் மகரம் ராசிக்கு வேகமாக சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குரு பகவான் தற்போது தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ளார். அதிசாரமாக பங்குனி மாதம் 16ஆம் தேதி மார்ச் 29ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். பின்னர் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜூலை மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வரை குருவின் வக்ர காலம் நீடிக்கிறது. இதே குரு பகவான் பின்னர் நேர் கதியில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி நகர்வார்கள். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். குருவானவர் தனுசு ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் சஞ்சரிக்க வேண்டும். ஆனால் அவர் தனுசு ராசியில் இருந்து திடீரென மகரம் ராசிக்கு சென்று விட்டு பின்னர் பின்னோக்கி வக்ரமாக தனுசு வருவார். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார். வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன் களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. மார்ச் மாதத்தில் நிகழப்போகும் அதிசார வக்ர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே தற்பேது குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதிசாரமாக நான்காம் வீட்டிற்கு நகரப்போகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சியால் மனதில் தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிக்க வைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். நிதானம் தேவை. அம்மா வழி உறவினர்களினால் அலைச்சல் செலவுகள் கூடும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குருவின் வக்ர பெயர்ச்சியினால் குழப்பம் நீங்கி தெளிவடையும். வீடு, வண்டி வாகனங்களை பராமரிப்பீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு உல்லாச பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்
குரு பகவான் தற்போது தன வாக்கு ஸ்தானமான இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். அதிசாரமாக மகரம் ராசிக்கு அதிசாரமாக நகரும் குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். இளைய சகோதரர்கள் வகையில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
இனம் தெரியாத கவலைகள் வாட்டி வதைக்கும் கவலை வேண்டாம் குருவின் பார்வை உங்களை குதூகலப்படுத்தும். குரு வக்கிரமடையும் காலமான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கால கட்டத்தில் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். வேலைப்பளு கூடும். பெற்றோருடன் வீணாக வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்க வாழ்க்கை துணைக்கு சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். மனைவி வழி சொத்துக்கள் கைக்கு வரும். பெண்கள் பொன் நகைகள் வாங்குவீர்கள். புது வீடு கட்டுவீர்கள், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் உள்ள குரு பகவான் அதிசாரமாக இரண்டாம் வீட்டிற்கு மார்ச் மாத இறுதியில் செல்கிறார். இந்த கால கட்டத்தில் வீடு வண்டி வாகன வசதி பெருகும். பணவரவு அதிகமாகும். உங்களின் உடல் ஆரோக்கியமும் அப்பாவின் உடல் ஆரோக்கியமும் நலமடையும்.
திடீர் யோகம் பண வரவு அதிகமாகும். நீங்க நினைத்த காரியங்கள் நிறைவேறும். கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மீக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். குரு வக்ர கதியில் செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். மறைமுக எதிர்ப்புகள் வரலாம் சமாளிக்க பழகுங்கள். புதிய வேலை கிடைக்கும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களே, குரு உங்க ராசியில் நீசமடைபவர். இப்போது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்னும் சில மாதங்களில் அதிசாரமாக உங்க ராசிக்கு வரப்போவதால் உங்க பேச்சில் கவனமாக இருங்க. வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடும் போது கவனமாக இருங்க. காரசாரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். கடன் பிரச்சினைகள் கவலையை தரும். வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மின் சாதனங்களை கையாளும் போது கவனமாக இருங்கள். கர்ப்பிணிகள் மருந்துகளை சாப்பிடும் போதும் கவனமாக இருங்க நல்லதே நடக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுங்கள். அவர்களை அடிக்கடி பாராட்டுங்கள்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே குரு பகவான் இப்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருவின் சஞ்சாரம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு மாறப்போவதால் நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது. மகனுக்கோ, மகளுக்கோ நல்ல வரன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். புது வீடு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த பந்தங்களினால் வீடு நிறையும் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அரசு வழியிலான உதவிகள் தேடி வரும். விரைய ஸ்தானம் என்பதால் உங்களுக்கு உறக்கம் குறையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். விரைய செலவுகளால் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் கவனமாக இருங்க. வீடு வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மூத்த சகோதரர்களினால் உதவி கிடைக்கும்.

மீனம்
குரு பகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இனி அதிசாரமாக குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். கடன்கள் அடைபடும் அளவிற்கு பணம் வரும். சுற்றுலாதலங்களுக்கு செல்வீர்கள். உல்லாச பயணம் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். உறவினர்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். செய்யவே முடியாது என்று சில காரியங்களை சவால் விட்டிருப்பீர்கள். அதை எளிதாக செய்து முடிப்பீர்கள்.












Click it and Unblock the Notifications