கந்தசஷ்டி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின்றி நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முருகப்பெருமான் ஆலயங்களில் நாளை நடைபெறுகிறது. திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவில் கடற்கரையில் சூரனை வதம் செய்வார் ஜெயந்திநாதர். இந்த நிகழ்ச்சியைக் காண அலைகடலென பக்தர்கள் திரள்வார்கள்.
கொரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு கோவில் திருவிழாக்கள் அனைத்துமே பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மகா தீபாராதனை
விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலை முன்பு எழுந்தருளினார்.

திருச்செந்தூர் கோவில் திறப்பு
கந்த சஷ்டியை முன்னிட்டு ஆறாம் திருநாளான நாளை வெள்ளிக்கிழமை விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

நாளை சூரசம்ஹாரம்
மதியம் சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய புறப்படுகிறார்.

பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம்
வழக்கமாக கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் கிரிப்பிரகார கடற்கரை நுழைவுவாயில் அருகில் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த முருகனுக்கு மறுநாள் சனிக்கிழமை சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த இரண்டு நாட்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கோவில் இணையதளத்தில் ஒளிபரப்பு
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications