செல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு - அம்மனுக்கு 9 நாட்கள் பிரம்மோற்சவம்
நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
சென்னை: சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம்.
புரட்டாசி மாதத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். இந்த வருடம் இன்று 10-10-2018 தொடங்கி19-10-2018 வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும். இன்று முதல் ஒன்பது நாட்கள் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம்.

நவராத்திரி கொலு
அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

சகல செல்வங்களும் கிடைக்கும்
நவராத்திரி நாட்களில் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

திருமணம் கைகூடும்
நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.

நவதானிய சுண்டல்
நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். நவகிரகங்களின் பாதிப்பினால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications