நவகிரக தோஷங்கள் நீங்க எந்த நாளில் என்ன தானம் தரலாம்
நவகிரகங்கள் 12 ராசிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நவ கிரகங்களினால் ஏற்படும் தோஷத்தை போக்க அந்த கிரகங்களுக்கு பிடித்தமான பொருட்களை தானம் செய்ய பாதிப்புகள் குறையும்.
சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் நவ கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ஒன்பது கோள்களினால் ஏற்படும் பாதிப்புகளை போக்க பிள்ளையார் இருக்கிறார். அவரை வணங்கினால் நவகிரக தோஷங்களும் நீங்கும். அதே நேரத்தில் சிலரின் கர்ம வினை, முன் ஜென்ம பாவத்தினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றன. அந்த தோஷங்களை போக்க கிரகங்களுக்கு பிடித்தமான பொருட்களை தானியங்களை தானமாக தரவேண்டும்.
நவ கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேதுவிற்கு பிடித்தமான நவ தானியங்கள் இருக்கின்றன. கோதுமை, நெல், பாசிப்பயறு, துவரை, கடலை,மொச்சை, எள், கொள்ளு, உளுந்து ஆகிய நவ தானியங்களை அந்தந்த கிரகங்கள் ஆதிக்கம் செய்யும் நாட்களில் தானம் செய்ய நன்மைகள் நடக்கும்.
நவகிரக தோஷங்கள் நீங்க அந்தந்த நாட்களில் ஆலய தரிசனமும் செய்ய வேண்டும். ராமநாதபுரம், தேவிபட்டினத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் போக்கியருளும் சக்தி படைத்தவர்கள். எந்த கிரகத்திற்கு எந்த நாளில் என்ன தானம் செய்யலாம் எந்த ஆலயம் தரிசனம் செய்யலாம் என படியுங்கள்.

கோதுமை தானம்
சூரிய பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் உண்டாகிறது என்றால், அந்த ஜாதகர் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த தோஷம் நிவர்த்தியாகும். சூரியனுக்கு பிடித்த தானியம் கோதுமை. எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும். சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியனால் உண்டான தோஷங்கள் விலகும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலும் வழிபட ஏற்ற தலமாகும்.

பச்சரிசி தானம்
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தால், அதைச் சரி செய்ய நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். அதன்படி கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம். சந்திரனுக்கு பிடித்த தானியம் நெல் எனவே பச்சரிசியில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும். கும்பகோணம் அருகேயுள்ள திங்களூர் தல சந்திர பகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கும்

துவரை தானம்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடும். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங்கள், பழ வகைகளை வழங்கலாம். செவ்வாய் பகவானுக்கு பிடித்த தானியம் துவரை துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.

பச்சைப்பயறு
ஒருவரது ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில், அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சினையாக உள்ளவர்கள், கிளிகளை வளர்க்கலாம் கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. இல்லாவிட்டால் தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம். புதனின் தானியம் பச்சைப்பயறு இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும். கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், திருமணத்தரகர்கள், பங்குச்சந்தை தரகர்கள் புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்துவர நன்மை அளிக்கும்.
மதுரை சொக்கநாதப் பெருமானையும் மீனாட்சி அம்மனையும் தரிசித்தால் புதன் கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் விலகியோடும்.

கொண்டைக்கடலை
குரு பகவானால் ஒரு சிலருக்கு பிரச்சினைகளும், தோஷங்களும் உருவாகலாம். திருமணத்தடை ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம். கல்வியில் தடை ஏற்படலாம். இந்த பாதிப்பு போக பசு அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம். குரு பகவானின் தானியம் கொண்டைக்கடலை இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும். திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார். குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கும். ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ஸ்ரீரங்கநாதர்
சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் செல்வ வளம் பெருகும். சுக்ர தோஷம் ஏற்பட்டால், அதன் விளைவும் கடுமையாக இருக்கும். சுக்ரனால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்க புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வைக்கலாம். சுக்கிரனின் தானியம் மொச்சை. வெள்ளை மொச்சைப் பயறு சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும். சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் சுக்ரீஸ்வரரை வழிபட சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்கும். கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானை வழிபடலாம். ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காகத்திற்கு உணவு
சனியால் ஏற்படும் தோஷத்திற்குத் தான். சனி திசை சிறப்பாக இல்லாத காலகட்டத்தில், சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். எருமை, கருப்பு நிற நாய், காகம் போன்ற சனி பகவானின் தானியம் எள் எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும். தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை செய்பவர்கள் இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.

பரிகார ஆலயங்கள்
ராகு - கேதுவால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க நாய்களுக்கு உணவளிப்பது, எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். ராகுவிற்கு பிடித்த தானியம் உளுந்து. கருப்பு உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும். திருநாகேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி ஆலயம் சென்று வழிபட ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும். கேதுவின் தானியம் கொள்ளு கொள்ளு கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.












Click it and Unblock the Notifications