ஏழரை சனி காலத்தில் கஷ்டம்தான் நடக்குமா? கல்யாண யோகம் தருவாரா சனிபகவான்?
ஏழரை சனி காலம் என்பது மனிதர்களுக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் காலம். சனிபகவான் ஏழரை ஆண்டுகள் ஒருவருக்கு பலவித கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கை பாடத்தை புரிய வைப்பார்.
சென்னை: ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா? அல்லது ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா? என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. ஏழரை சனி காலம் என்பது மனிதர்களுக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் காலம். சனிபகவான் ஏழரை ஆண்டுகள் ஒருவருக்கு பலவித கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கை பாடத்தை புரிய வைப்பார்.
திருமணம் என்பது மனித வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகும். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் சிலருக்கு திருமணத்தடை ஏற்படும். குரு பலன் வந்தாலோ, குரு பார்வை ராசிக்கு கிடைத்தாலோ கல்யாண யோகம் கை கூடி வரும்.
தவறு செய்பவர்களுக்கு அவரவர் செய்த பாவத்திற்கு ஏற்ப தண்டனைகளைக் கொடுப்பவர் சனிபகவான் எனவேதான் சனிபகவானை நீதிமான் என்று அழைக்கப்படுகிறார்.

ஏழரை சனி என்ன செய்யும்
கும்ப ராசியில் சனிபகவான் இப்போது ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா? ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?' என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. ஏழரைச் சனிக்கும், மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம், வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.

30 ஆண்டுகளுக்குப் பின் கும்ப சனி
சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகிறது . ராசி சக்கரத்தை ஒரு சுற்று சுற்றி வர, தோராயமாக 30 ஆண்டுகள் ஆகிறது. அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். இது சனிபகவானின் சஞ்சாரத்தை வைத்தே சொல்கின்றனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்கிறார்.

சனி பகவான் தரும் சங்கடங்கள்
கோச்சாரத்தில் சனிபகவான் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றமான பலன்களையும், ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்த சுப - அசுப பலன்களையும் தருவார்.

ஏழரை சனி எப்போது வரும்
ஏழரைச் சனி என்பது, ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஆகும் . ஜென்ம ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் 'விரயச் சனி' என்றும், ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலம் ஜென்ம சனி என்றும், ராசிக்கு 2ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தை பாத சனி அல்லது குடும்ப சனி என்றும் அழைக்கப்படுவார்.

கஷ்ட நஷ்டத்தை புரியவைக்கும் சனி
சனி பவான், ராசிக் கட்டத்தை ஒரு முறை வலம் வரும் 30 ஆண்டுகளில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என 15 ஆண்டுகள் ஒரு ராசியை தன் பிடிக்குள் வைத்திருப்பார். அதன்படி மனிதனின் சராசரி ஆயுள் காலமாக 60 ஆண்டுகளில் 2 சுற்று வலம் வரும் சனி பகவான், ஒருவரை 30 ஆண்டுகள் தன் பிடியில் வைத்து, ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப, ஏற்ற- இறக்கத்தைத் தந்து வாழ்வின் தத்துவத்தை புரிய வைப்பார்.

திருமணம் செய்யலாமா?
பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள், சனியின் பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடிந்துவிடும்.

குடும்ப பாரம் கொடுக்கும் சனி
சராசரியாக பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுக, போகங்களை அனுபவிக்கும் பாக்கியம் ஆரம்பமாகும். திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இருவரின் கர்ம வினைகளும் கலந்து பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானங்கள் முழுமையாக இயங்கும். ஒரு ஆணுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டத்தில், அவருக்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி - குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம் உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.

உண்மையை புரிய வைப்பார் சனி
அதே போல் பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போன்ற இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார். எனவே பாவம் செய்தவர்களுக்கு ஏழரை சனி காலத்தில்
கஷ்டங்களைக் கொடுக்கும் சனிபகவான், நல்லவர்களுக்கு நல்ல வேலை, நல்ல குடும்ப வாழ்க்கையை கொடுப்பார் சனிபகவான்.












Click it and Unblock the Notifications